உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
54. வயந்தகன் அகன்றது |
|
வையெயிற்றுத்
துவர்வாய் வாசவ
தத்தைதன் தார்ப்பூண்
மார்பிற் றந்தை
கடிமனைச்
சீர்ப்பூண் களைந்த சில்லென்
கோலமொடு
நிலாவெண் முற்றத் துலாவி யாடிச் 25
செம்முது செவிலியர் கைம்முதற்
றழீஇய சாலி
வாலவிழ் பாலொடு
கலந்த தமனிய
வள்ளத் தமிழ்த மயிலாள்
|
|
(இதுவுமது) 21
- 27: வையெயிற்று..........அயிலாள்
|
|
(பொழிப்புரை) கூரிய
பல்லொழுங்கினையும் பவழம் போன்ற வாயினையும் உடைய வாசவதத்தை தன்னுடைய
மாலையையும் அணிகலன்களையும் அணிந்த மார்பினையுடைய தந்தையினது
காவலுடைய அரண்மனையில் சிறந்த பேரணிகலன்களைக் களைந்து
இயற்றிய சிலவாகிய ஒப்பனையோடு வெள்ளிய நிலா முற்றத்திலே ஓடியாடிச்
செம்மையும் முதுமையும் உடைய தன் செவிலித் தாயார் தமது கையின்கண் ஏந்திய
பொற்கிண்ணத்தில் அரிசியாலாய வெள்ளிய சோற்றைப் பாலொடு கலந்த
தேவரமிழ்தம் போன்ற உணவினை உண்ணாதவளாய் என்க.
|
|
(விளக்கம்) வை - கூர்மை. தந்தை :
பிரச்சோதனன். சீர்ப்பூண் என்றது - சிறப்புடைய பேரணிகலன்களை. அவை
பொறை மிக்கனவாதலிற் களைந்து என்றவாறு. சில்லென் கோலம் - சிலவாகிய
ஒப்பனை. கைம்முதல் - கையின்கண். சாலி - நெல். வாலவிழ் -
வெண்சோறு. தமனிய வள்ளம் - பொற் கிண்ணம். அயிலாள் -
உண்ணாள்.
|