உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           யானையும் புலியுங் கூனற் கரடியும்
          அரிமா னேறு நரிமான் சூழ்ச்சியும்
     30   ......வுங் காட்டமொ டெனையவை பிறவும்
          தந்துரைக் கிளவியிற் றந்துறை முடித்த
          தன்னிணை யாயம் பன்னொடி பகரச்
 
                   (இதுவுமது)
            28 - 33: யானை...........செய்யாது
 
(பொழிப்புரை) யானைக் கதையும், புலிக்கதையும், கூனலையுடைய கரடிக் கதையும், ஆண் சிங்கத்தின் கதையும் நரிமாவின் சூழ்ச்சிக் கதைகளும் (.......காட்டமொடு) இன்னோரன்ன பிற கதைகளுமாகிய கட்டுக் கதை கூறுதலாகிய மொழி தமது தொழிற்றிறம் நன்கு பயின்று முதிர்ந்தவரும் தன்னோடு இணைந்தாடுபவரும் ஆகிய தோழியர் பலவாகிய அக் கதைகளையும் பலவாகிய நொடிகளையும் கூற அவற்றைச் செவியாலே கேட்டு மகிழும் இன்பத்தை இம்மாலைப் பொழுதிலே நுகர்தலின்றி என்க.
 
(விளக்கம்) வாசவதத்தை பண்டு நிகழ்ந்த இத்தகைய மாலைப்பொழுதுகளிலே தந்தை மனையில் முற்றத்து ஆடியும் அயிலாமலும் செவியிற் கேட்கும் இன்பத்தை இற்றை நாள் இம்மாலைப் பொழுதின் நுகராமல் என்க.

    யானை முதலியவற்றைப் பற்றிய தந்துரைக்கிளவி என்க. தந்துரைக்கிளவி - கட்டுக் கதை. தோழிமார் இத்தகைய கதைகளை நன்கு பயின்று முதிர்ந்தவர் என்பார், தந்துரை முடிந்த ஆயம் என்றார். அவர் தொழிலாகலின் - தந்துரை எனப்பட்டது . நொடி - பொருளொடு புணர்ந்த நகை மொழி; விடுகதை முதலியன என்க. செல்வம் இன்பத்திற்கு ஆகு பெயர்.