உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           செவியிற் கேட்குஞ் செல்வஞ் செய்யாது
          நண்ணிய தோழியொடு கண்ணிற் காணக்
     35   கலவ மஞ்ஞை கவர்குரல் பயிற்றி
          இலவங் கொம்புதோ றிறைகொண் டீண்டப்
          பொறிவரி யிரும்புலிப் போத்துநனி வெரீஇ
          மறியுடன் றழீஇய மடமா னம்பிணை
          துள்ளுநடை யிரலையொடு வெள்ளிடைக் குழுமப்
     40   பிடிக்கணந் தழீஇய பெருங்கை யானை
          இடிக்குர லியம்பி யெவ்வழி மருங்கினும்
          நீர்வழிக் கணவரு நெடுங்கைய வாகிக்
          காரிரு முகிலிற் கானம் பரம்பச்
          செழுநீர்ப் பொய்கையுட் கொழுமலர் கூம்பப்
     45   புள்ளினங் குடம்பை சேரப் புல்லென
          அம்புறு புண்ணி னந்திவந் திறுப்ப
 
                   (இதுவுமது)
            34 - 46 : நண்ணிய..........இறுப்ப
 
(பொழிப்புரை) தன்னோடு வந்த காஞ்சன மாலையோடு தானும் கண்கூடாகக் காணும்படி தோகையையுடைய மயில்கள் விரும்புங் குரலாலே பலகாலும் அகவி அவ்விலவங் கொம்புதோறும் தங்கிக் குழுமா நிற்பவும், புள்ளிகளையும் வரிகளையும் உடைய பெரிய ஆண் புலிக்கு மிகவும் அஞ்சிக் குட்டிகளோடு கூடிய இளமையுடைய அழகிய பெடைமான்கள் துள்ளுகின்ற நடையையுடைய தத்தங் கலைமான்களோடு வறுநிலப் பரப்பின்கண் கூடியுறையா நிற்பவும், தத்தம் பிடியானையைத் தழுவிய பெரிய கையையுடைய களிற்றியானைகள் இடிபோன்ற தமது குரலாலே பிளிறி எல்லாத் திசைப் பக்கங்களினும் நீருளவாகிய இடத்தை உயிர்த்தறியும் பொருட்டு உயர்த்திய கையையுடையனவாகிக் கரிய பெரிய முகிற் கூட்டம் சென்றாற்போன்று அப்பாலை நிலத்திலே பரவிச் செல்லா நிற்பவும், மிக்க நீரையுடைய பொய்கைகளிலே கொழுவிய தாமரை மலர்கள் கூம்பாநிற்பவும், பறவையினங்கள் தத்தங் கூடுகளிலே சென்று தங்கவும், உலகம் பொலிவிழந்து தோன்றாநிற்பவும், காதலரைப் பிரிந்துறைவோர்க் கெல்லாம் புண்ணிலுற்ற அம்பு போன்று அற்றை நாள் அந்தி மாலைப் பொழுது உலகின்கண் வந்திறையாநிற்ப என்க.
 
(விளக்கம்) கலவம் - தோகை. மஞ்ஞை - மயில். கவர் குரல் - தத்தம் காதற்றுணையைக் கவரும் குரல் எனினுமாம். தோழியுந் தானும் கண்ணிற் காணும்படி மஞ்ஞை இறைகொண்டீண்ட என்க. இறை கொண்டு - தங்கி. புலிப்போத்து - ஆண்புலி. மறி - குட்டி. பிணை - பெண்மாண். துள்ளுநடை - தெறித்த நடை. இரலை - கலைமான். வெள்ளிடை - புதர் முதலியன இல்லாத வறுநிலப்பரப்பு. இடிக் குரல் - இடி போன்ற குரல். நீருள்ள வழியை உயிர்த்தறிதற் பொருட்டு என்க. குடம்பை - கூடு. புண்ணுறு அம்பின் என மாறுக.