உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           ஓங்கிய பெரும்புக ழுருமண் ணுவாவறை
          தேங்கமழ் திருநகர்த் திசையு மெல்லையும்
          ஆற்ற திடரு மவ்வழி யுள்ள
     50   பொல்லாக் குறும்பும் போகுதற் கருமையின்
          காலை நீங்கிய மாலை யாமத்துப்
          பனிப்பூங் கோதையொடு தனித்தன மியங்கின்
          அற்றந் தரூஉமஃ தமைச்சிழுக் குடைத்தென
          உற்ற தோழ னுதயணற் குரைக்கும்
 
                   (வயந்தகன் கூற்று)
            47 - 54 : ஓங்கிய..........உற்ற தோழன்
 
(பொழிப்புரை) இவ்வாறு அந்தி மாலைப் பொழுது வந்துறுதலும் நெருங்கிய நண்பனாகிய வயந்தகன் உயர்ந்த பெரும் புகழையுடைய உருமண்ணுவா வதிகின்ற தேன் மணங் கமழுஞ் சோலையையுடைய அழகிய சயந்தி நகரம் இருக்கின்ற திசையும் அதன் எல்லையும் அதனை எய்துதற்குரிய வழித் துயரமும் அவ்வழியில் அமைந்த பொல்லாங்குடைய சிற்றரண்களும்; நம்மாற் கடத்தற் கரியன; ஆதலாலே, அச் சயந்தி நகரத்தை எய்துவேமென்று எண்ணி யாம் காலைப் பொழுதினும் அது கழிந்த மாலைப் பொழுதினும் யாமத்தும் குளிர்ந்த மலர் மாலையணிந்த இந்நங்கையோடு தகுந்த துணையின்றித் தமியமாய்ச் செல்வோமாயின், அங்ஙனம் செல்லுதல் நம் மறிவின் சோர்வினைக் காட்டாநிற்கும். ஆதலால் அச்செயல் அமைச்சர் தன்மைக்குப் பெரிதும் இழுக்குத் தருவதாகும் என்று தன்னுள்ளே கருதி என்க.
 
(விளக்கம்) உருமண்ணுவா - உதயணன் அமைச்சர்களுள் ஒருவன். அவன் உறை திருநகர் - சயந்தி நகரம், எல்லை என்றது - தொலை என்பது படநின்றது. ஆற்றது இடர் - வழியிலுண்டாகும் துன்பம். குறும்பு - சிற்றரண்; கோலலைக்கும் குறும்பர் குழுவுமாம். காலையும் அது நீங்கிய மாலையும் யாமத்தும் என உம்மை விரித்துரைக்க. கோதை - வாசவதத்தை. தகுந்த துணையோ டியங்கவேண்டும் என்பான் தனித்தன மியங்கின் என்றான். அற்றம் - ஈண்டு ஆராய்ச்சியிற் சோர்வு படுதல். அமைச்சு - அமைச்சர் தன்மை. எனவே அங்ஙனம் செல்ல வுடன்படின் அமைச்சனாகிய யானே தவறுடையேன் ஆவேன் என்று எண்ணினானாயிற்று.