உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           உற்ற தோழ னுதயணற் குரைக்கும்
     55   கொடிமணி நெடுமதிற் கொற்றவன் மடமகள்
          பிடிமிசை யிருந்து பெருங்கவின் வாடி
          வருத்த மெய்திய வண்ணமும் வழிநடந்
          தரத்த மார்ந்த வஞ்செஞ் சீறடி
          கோவத் தன்ன கொப்புளங் கூர்ந்து
     60   நோவ வொல்கி நொசிந்த மருங்குலள்
          அமிழ்துற ழடிசி லயிலா வசைவொடு
          நவைகொண் டழிந்து நடுக்க மெய்தித்
          தாங்க லாற்றா டளர்தலு மாங்கே
 
                  (இதுவுமது)
      54 - 63 : உதயணற் குரைக்கும் ... தளர்தலும்
 
(பொழிப்புரை) பின்னர் உதயண குமரனை நோக்கிக் கூறுவான் : 'பெருமானே! கொடிகளால் அழகு செய்யப் பெற்ற நெடிய மதிலையுடைய உஞ்சை நகரத்து மன்னனாகிய பிரச்சோதனனுடைய இளமகளாகிய வாசவதத்தை தானும் விரைந்தியங்கிய பிடியானை மேல் நெடும் பொழுது வீற்றிருந்தமையாலே தனது பேரழகு வாடித் துயருற்றிருக்கின்ற தன்மையையும், பிடி வீழ்ந்த பின்னர் நம்மோடு இவ் வெம்பாலை வழியிலே நடந்து சிவப்பேறிய அழகிய தனது சிவந்த சிற்றடிகளிலே இந்திர கோவத்தை யொத்த கொப்புளங்கள் மிகுந்து வருந்தும்படி அசைந்தசைந்து துவண்ட இடையினளாய் அமிழ்தம் போன்ற அடிசிலும் உண்ணாத இளைப்போடு துன்பங்கொண்டு நெஞ்சழிந்து மெய்ந் நடுங்கி இத்துயரத்தைப் பொறுக்கவியலாமல் தளர்வதனையும் யாம் கண்டாமன்றோ?' என்க.
 
(விளக்கம்) கொற்றவன் - பிரச்சோதனன். வண்ணம் - தன்மை. பிடி வீழ்ந்த பின் வழி நடந்தென்க. இயல்பாகவே சிவந்த சீறடி யென்க. கோவம் - இந்திர கோபப்புழு. இது நிறவுவமை. உறழ் : உவமவுருபு. அடிசில் - உணவு. நவை - துன்பம். தளர்தலையும் யாம் கண்டாமன்றோ என வருவித் தோதுக.