உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
         
     75   திற்றுங் கேளென மற்றவற் குரைக்கும்
          கொடியணி நெடுமதிற் கொடிக்கோ சம்பிப்
          படியணி நெடுங்கடைப் பகலங் காடியுள்
          ஊறுகளி யானை யொருங்குட னேற்றி
          வீறுபடு கோலமொடு வியனகர் விழவணி
     80   கொண்ட காலைத் தண்டப் பாற்படுத்
          தென்னணி பெருங்கலந் தன்னணிந் தேற்றிக்
          குற்றமில் பெரும்புகழ்க் கோப்பெருந் தேவி
          கொற்றக் கோயிலுண் மற்றுப்பிற ரின்றித்தன்
          பெருமலர்ச் சீறடி யிருநிலத் தியங்கத்
     85   தண்ட வேந்தன் றமரா நமக்கெனக்
          கொண்ட கொள்கையுங் குறிப்பினது நிலைமையும்
 
                  (உதயணன் கூற்று)
           75 - 86 : இற்றும்............நிலைமையும்
 
(பொழிப்புரை) நண்பனே ! 'யான் கூறுமிச் செய்தியையும் விழிப்புடன் கேட்பாயாக!' என்று அவ்வயந்தகனுக்குக் கூறுவான்: கொடிகளாலே அழகுற்ற நெடிய மதிலையும் அடையாளக் கொடியினையும் உடைய நமது கோசம்பி நகரத்தின்கண் படிக்கட்டுகளையுடைய அழகிய நெடிய பகங்காடி வீதியின்கண்ணே பண்டொரு நாள் யான் அவ் விடபகனை யான் ஊர்ந்த களிப்புடைய களிற்றியானை மிசை என்னோடு ஏற்றிக் கொண்டு பேரழகுடைய ஒப்பனையோடே அகன்ற அந்நகரமானது விழாவிற்குரிய அணி கொண்டிருந்த காலத்தே உலாச் சென்றதும், பின்னர் அவ்விடபகனை நமது படை மறவர் கூட்டத்தே அழைத்துப் போய் அங்கே அவனுக்கு எனது பேரணிகலன்களை யெல்லாம் அணிந்து மீண்டும் யானை மீதேற்றிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றதும், பின்னர்க் குற்றமற்ற பெரும்புகழையுடைய என் தாயாகிய கோப்பெருந்தேவியின் வெற்றியுடைய மாளிகைக் குள்ளே இருவரும் புகுந்தேமாக, எமது வருகை கண்ட கோப்பெருந்தேவி பிறர் யாருமின்றித் தமது பெரிய தாமரை மலர் போன்ற சீறடி வருந்த வரவேற்க எதிர் வந்த பொழுது, அத்தேவியார்க்கு அவனைக் காட்டி 'அன்னாய்! இவன் நம் படைத்தலைவன் ஆவான்; மேலும் எனக்கு நண்பனுமாவான்' என்று அறிவித்தமையும் அது கேட்ட தேவியார் ஏற்றுக் கொண்ட கொள்கையும், இக் குறிப்பின் நிலைமையும் என்க.
 
(விளக்கம்) இடபகன் வயந்தகனை வரவேற்கவும் அவன் கூற்றை நம்பவும் உதயணன் பண்டு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை அடையாளமாகக் கூறுகின்றான் என்க.

    இற்றும் - இதனையும். மற்றவற்கு - வயந்தகனுக்கு. படி - படிக்கட்டு. பகலங்காடி - பகற் காலத்தே வாணிகஞ் செய்யும் கடைத்தெரு. அல்லங்காடி யுண்மையு முணர்க. விழவணி - விழவின் பொருட்டியற்றும் சிறப்பழகு. தண்டம் - படை. தன் என்றது - இடபகனை. கோயிலுட் சென்றேமாக என்க. சீறடி இரு நிலத்தியங்கும்படி வரவேற்க வரவென்க. தமர் : பன்மை ஒருமை மயக்கம். அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையும் என்க. குறிப்பு - அடையாளம்.