உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           வெஞ்சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின்
    115   விடுத்த பல்படை பெயர்த்தற் பொருட்டா
         நம்படை யொழிந்த வண்ணமும் வெம்படைக்
         காவல னாடு கங்கு னீங்கிச்
         சார வந்த தன்மையுஞ் சார்ந்தபின்
         அரும்பொறி யழிந்த வெந்திரம் போல
    120   இரும்பிடி வீழ்ந்தத னின்னுயி ரிறுதியும்
         இற்ற விரும்பிடிப் பக்க நீங்கி
         இடுக்க ணெய்தி யிலங்கிழை மாதர்
         நடக்க லாற்றா ணடுக்க மெய்திக்
         கடக்கருங் கானத்துக் கரந்த சேக்கையும்
 
                  (இதுவுமது)
         114 - 124 : வெகுட்சியின்............சேக்கையும்
 
(பொழிப்புரை) பிரச்சோதனன் தனது வெகுளி காரணமாக ஏவிய பலவாகிய படைகளையும் தடைசெய்தற் பொருட்டாக நம் படைமறவர் அவரை எதிர்த்துழி அப்படை கெட்டவகையையும் பின்னர் வெவ்விய படையினையுடைய பிரச்சோதனமன்னன் நாட்டினை இரவிலேயே யாம் கடந்து நம் நாட்டை அணுகவந்த தன்மையையும் அணுகிய பின்னர் செயற்கரிய விசையழிந்த பொறி போலப் பெரிய பிடியானை வீழ்ந்ததனையும் அந்த யானையினுடைய இனிய உயிர்க்கு இறுதி எய்தியதனையும், உயிர்நீத்த பிடியானையின் பக்கத்தினின்றும் பெரிதும் இடையூறுற்று விளங்குகின்ற அணிகலனையுடைய வாசவதத்தை தனது உடல் நடுக்கமடைந்து ஒருவாறு நடந்து மேலும் நடக்க ஆற்றாளாக யாம் கடத்தலரிய இப் பாலைக்கானத்திலேயே கரந்துறையாநின்ற இவ்விடத்தையும் என்க.
 
(விளக்கம்) நம் படைமறவர் எதிர்த்துழி அப்படை ஒழிந்த வண்ணம் என ஒரு சொற் பெய்து கொள்க. காவலன் - பிரச்சோதனன். பொறி - விசை. வீழ்ந்ததனுடைய இன்னுயிர் என்க. சேக்கை - தங்குமிடம்.