உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
54. வயந்தகன் அகன்றது |
|
125 சேக்கையு ணின்றுநீ சென்ற
செலவும் வாய்ப்பக்
கூறி வாட்படை
தொகுத்து வையம்
பூட்டி வழிவரல்
விரைந்தென்
எவ்வந் தீர விருள்கழி
காலைக் கோற்குறி
யெல்லையுட் குறிவழி வம்மென 130
வாட்டிறல் வத்தவன் வயந்தகற் போக்கிப்
|
|
(இதுவுமது) 125 -
130: சேக்கை..........போக்கி
|
|
(பொழிப்புரை) இவ்விடத்தினின்றும்
நீ செல்லாநின்ற இச் செலவின் காரணத்தையும் இடபகனுக்கு நன்கு
விளக்கமாகக் கூறி வாளேந்திய படைகளைக் கூட்டிக் கொண்டு தேர்முதலிய
ஊர்திகளையும் பூட்டிக்கொண்டு மீண்டு வருங்கால் வழியினும் விரைந்து
வருக ! ஈண்டு என் துன்பந்தீரும்படி இற்றை இரவின் இருள் புலராநின்ற
விடியற்காலத்தில் இவ்விடத்தினின்றும் அம்பு பாயும் எல்லைக்குள் குறித்த
வழியிலே வருவாயாக, என்று கூறி வாட்போர் ஆற்றல் மிக்க உதயணன்
அவ்வயந்தகனைப் போக்கி என்க.
|
|
(விளக்கம்) செலவும் - செலவிற்குரிய
காரணமும் என்க. வையம் - என்றது தேர் முதலிய ஊர்தி என்னும்
பொருள்படநின்றது. வழிவிரைந்து வரல் என மாறுக. வரல் - வியங்கோள்.
எவ்வம் - துன்பம். கோல் - அம்பு. வம் - வருதி. வத்தவன் -
உதயணன்.
|