உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           பனிவரை மார்பன் றனிய னாகி
          வேழ வேட்டத்து வீழ நூறி
          அருஞ்சிறை யெய்தி யாப்பொடு புக்க
          பெருஞ்சிறைப் பள்ளிப் பேரிருள் போலும்
    135    துன்பப் பெருங்கடற் கின்ப மாகி
          மாந்தளிர் மேனி யேந்துபுணை யாக
          நீந்துதல் வலித்த நெஞ்சின னாகிக்
          கணையொடு திரிதருங் காமன் போலத்
          துணைநல மாதரைத் தோழியொடு துயிற்றித்
 
        ;          (உதயணன் செயல்)
            131 - 139 : பனிவரை..........துயிற்றி
 
(பொழிப்புரை) இமயமலைபோன்று பகைவரான் வென்று கடத்தற் கரிய மார்பையுடைய உதயணகுமரன் பின்னர்த் தான் ஒருவனேயாகி நின்று யானை வேட்டையில் பிரச்சோதனனால் ஏவப்பட்ட படைமறவர் எல்லாம் மாண்டு வீழும்படி கொன்று பின்னர்ச் சாலங்காயன்பால் கடத்தற்கரிய சிறையாக அகப்பட்டுத் தளையோடு தான் புகுந்த அந்தப் பெருஞ்சிறைக் கோட்டத்துப் பள்ளியறைக்கண் செறிந்திருந்த பேரிருளை யொத்த அந்த இலவின் முழையிற் செறிந்துள்ள இருளினூடே தான் எய்திய துன்பப் பெருங்கடற்கெதிராய் இன்பப்பெருங்கடலாகித் திகழாநின்ற மாந்தளிர் போலும் மேனியையுடைய வாசவதத்தையையே அத்துன்பக் கடலின்கட் டன்னைத் தாங்கும் புணையாகக்கொண்டு நீந்திக் கடத்தற்குத் துணிந்த நெஞ்சினை யுடையவனாகிக் கணையோடு திரியா நின்ற காமவேள் போன்று தன் வாழ்க்கைத் துணையாகும் நலமெலா முடைய அவ்வாசவதத்தையைக் காஞ்சனமாலையோடு ஒருங்கே துயில் கொள்ளச் செய்து என்க.
 
(விளக்கம்) பெருஞ்சிறைப்பள்ளிப் பேரிருள் அம்முழையினூடு செறிந்த இருளுக்குவமை என்க. துன்பத்திற்கு உவமை யன்று. இருள் போலும் துன்பம் என்ற பின்னர் துன்பக்கடல் எனப் பின்னரும் உவமித்தல் கூடாமை யுணர்க. இருள் போலும் அம் முழைக்கண் இருளினூடே என அவாய் நிலையான் வருவித்துக்கொள்க.

    துன்பத்தைக் கடல் என்றமையின் அக்கடலுக்கு எதிராய் இன்பக் கடலாகி என்க. மாந்தளிர் மேனி துன்பக்கடற் கெதிராய் இன்பக்கடலாகிப் பின்னரும் அத்துன்பக்கடற்கு ஏந்து புணையும் ஆக என எச்சவும்மை கொடுத்து ஓதுக.

   வாசவதத்தையைப் பெற்ற வின்பத்திற்கு முன்னே தான்பட்ட துன்பமெல்லாம் இல்லையாய்ப் போதலின்: துன்பக்கடற்கு எதிராயதோர் இன்பக்கடல் என்றார். மாதர் - வாசவதத்தை. தோழியும் மெல்லியலாதலின் அவளையும் துயில்வித்தான். இதனால் அவனது அளியுடைமை புலனாம்.