உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
         
     140   துஞ்சல் செல்லான் வெஞ்சின விடலை
          வாள்வலங் கொண்டு காவ லோம்ப
          வரிநிறக் கோம்பி வாலிமிழ்ப்பு வெரீஇ
          எரிமல ரிலவத் திருஞ்சினை யிருந்த
          அலந்த மஞ்ஞை யாமங் கூவப்
     145   புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென்.
 
                   (இதுவுமது)
            140 - 145 : துஞ்சல்........இரவென்
 
(பொழிப்புரை) தான் உறக்கம் நீக்கி வெவ்விய சினமுடைய அத்தலைமகன் தனது வாட்படையை வலக்கையிலே பற்றிக்கொண்டு அம்மா தரிருவரையும் காவல் செய்யாநிற்பவும் வரியையும், நிறத்தையுமுடைய பச்சோந்தி தனது வாலினாலே தம்மைக்கட்டி விடுதற்கு அஞ்சித் தீப்போன்ற மலரையுடைய அவ்விலவமரத்தின் பெரிய கிளைகளிலே தங்கியிருந்த வருத்தத்தையுடைய மயில்கள் வைகறையாமத்தின்கண் அகவாநிற்பவும் அவ்வேந்தனுக்கு அவ்விராப் பொழுது கழிந்தது என்க.
 
(விளக்கம்) துஞ்சல்செல்லான் - ஒருசொல். பாலைநிலத்தி லிருத்தற்கேற்ப விடலை என்றார். விடலை - பாலைத்திணைத் தலைமகன். கோம்பி - பச்சோந்தி. மயில் கோம்பிக்கு அஞ்சுமென்பதனைக் 'கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை' எனவரும் மணிவாசகர் பொன் மொழி யானும் (திருச்சிற். 21) அறிக.

         54. வயந்தகன் அகன்றது முற்றிற்று.