உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           தந்தி கூப்பித் தென்புலக் கிறைஞ்சித்
          தமரிற் பிரிந்ததன் றனிமையை நினைஇ
    10    அமரிய தோழி யாகத் தசைந்து
          சுடர்முகம் புல்லெனப் படரொடு மயர்ந்து
          வேனில் வள்ளியின் மேனி வாடி
          உள்ளங் கனலு மொள்ளிழை மாதரைக்
          குற்ற நலத்துக் குறிப்புநனி காட்டி
    15     உற்ற வெந்நோ யோம்பென வுற்ற
          காஞ்சன மாலையை யாங்கன மருளி
 
               (இதுவுமது)

            8 - 16: தென்புலக்கு............அருளி

 
(பொழிப்புரை) வாசவதத்தையும் தோழியுமிருந்த அக்கரவிடத்தே சென்று ஆங்குத் தான் சென்ற தென்புலத்தை நோக்கி வணங்கித் தன் சுற்றத்தாரினின்றும் பிரிந்து போந்த தன் தனிமையை எண்ணித் தன்னைப் பெரிதும் விரும்பிய காஞ்சன மாலையின் மார்பிலே சாய்ந்து வழிவந்த வருத்தத்தாலே ஒளியுடைய தனது திருமுகம் ஒளி மழுங்கிப் புற்கென்று தோன்றா நிற்பத் துன்பத்தோடும் நெஞ்சயர்ந்து வேனிற் பருவத்து வெயிலாலே வாடிய பூங்கொடி போன்று தன் திருமேனி வாடி நெஞ்சகம் வெம்புகின்ற வாசவதத்தைக்கு அவளிழைத்த உடன் போக் காகிய குற்றத்தினால் எய்தும் நலத்தைக் குறிப்பாக நன்கு காட்டி அவள் எய்தாநின்ற வெவ்விய துன்பத்தை அகற்றி ஆற்றுவாயாக ! என்று காஞ்சனமாலைக்கு அவ்விடத்தே பணித்தருளி என்க.
 
(விளக்கம்) தென் புலம் - தென்றிசை. தன் கணவனாகிய உதயணன் தென்றிசைக்கண் நின்றமையால் வாசவதத்தை அந்நாட் காலையிலே தெய்வந் தொழாளாய் அத்திசை நோக்கித் தொழுதாள் என்க. தான் தமரிற் பிரிந்த தனிமையை நினைந்து தன்னைப் பெரிதும் விரும்பிய தோழி என்க. படர் - இப்பொழுதுற்ற இடையூறு காரணமாக வந்த துயர் என்க. வழிவந்த வருத்தத்தால் மேனி வாடினள் என்க. மாதரை ஓம்பு என வியையும்.

    தன்னுடன் போந்தது தான் செய்ததொரு குற்றமாகும் என்று வாசவதத்தை கருதுவாளென வுட்கொண்டு காஞ்சனமாலையை நோக்கி அவன் செய்த குற்றத்தாலுண்டாகும் நலத்தினைப் பற்றிய குறிப்புக்களை நீஎடுத்துக் காட்டித் தேற்றுக என்றான் என்க.

    உடன்போக்குத் தந்தை தாயராற் குற்றமாகக் கருதப் படினும் அதுவே கற்புக் கடம்பூண்ட மகளிர்க்கு அறமாம் என்பதைச் சான்றோர் குறிப்புக் களை எடுத்துக்காட்டித் தேற்றுக என்றவாறு.