உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           வெண்மதி நெடுங்குடை வேற்றவன் படையொடு
    25    நுண்மதி யமைச்ச னுண்மறைந் தொடுங்கி
          மராவு மாவுங் குராவுங் கோங்கும்
          தண்ணிழற் பொதும்பர்க் கண்ணழற் காட்டும்
          காழமை கழைத்தொடர்க் கடும்பரிப் போர்வைத்
          தாழமை பெரும்பொறித் தச்சுவினைப் பொலிந்த
    30    அரக்கூட் டம்புகர் மரக்கூட் டியானையைச்
          செறுவுபு நிறீஇய செய்கை யோரா
          தெறிபடை யாளரோ டுறுமுரண் செய்யக்
          காழ்த்த காலைக் கீழ்த்திசை முன்பகல்
 
               (இதுவுமது)

             24 - 33: வெண்மதி..........காலை

 
(பொழிப்புரை) பண்டொரு நாள் வெள்ளிய நிறைத் திங்கள் போன்ற நெடிய குடையினையுடைய பகைவனாகிய பிரச்சோதன மன்னனுடைய படையோடு நுண்ணிய அறிவினையுடைய அமைச் சனாகிய சாலங்காயன் மராஅமரமும் மாமரமும் குராஅ மரமும் கோங்க மரமும் குளிர்ந்த நிழலைத் தாராநின்றதொரு சோலையிலே தன் கண்களிலே தீயைத் தோற்றுவியா நின்றதும், புறக்காழமைந்த மூங்கிலாலே தொடுக்கப்பட்ட தொடர்ச்சியினையும், விரைந்த செல வினையும் மேற்போர்வையினையும், உள்ளே தாழக் கோலமைந்த பெரிய இயந்திரத்தினையும் தச்சர் தொழிற் சிறப்பாலே உயிருள்ளது போற் பொலியும் பொலிவினையும் உடைய அரக்கு வழிக்கப்பட்ட அழகிய புள்ளிகளையுடைய மரத்தாற் கூட்டப்பட்ட மாய யானையின் அகத்தே நன்கு தானும் படைமறவரும் மறைந்து ஒடுங்கி, அந்தயானை யைத் தன்னைச் சிறைபற்றி அடக்கும் பொருட்டுத் தன்னெதிரே நிறுத்திய வஞ்சகச் செய்கையினை உணராமல் அந்த யானையோடும் பின்வரும் கொல்லும் படைக்கலம் பற்றிய மறவரோடும் மிக்க போரினைச் செய்ய நெஞ்சில் வைரம் கொண்டு எழுந்த காலத்தே என்க.
 
(விளக்கம்) வேற்றவன் : பிரச்சோதனன். அமைச்சன் : சாலங்காயன். மரக் கூட்டியானையுண் மறைந்து ஒடுங்கி எனப் பின்னர்க் கூட்டுக. கண்ணழல் காட்டும் என்பது முதலியன மாய யானைக்கு அடைமொழிகள். காழ் - வைரம். மூங்கிலைத் தொடர் புறுத் தியற்றிய யானை, பரி யானை, போர்வையினையுடைய யானை, பொறி யானை, பொலிந்த யானை, அரக்கூட்டி யானை, புகார் யானை, மரக்கூட்டி யானை எனத் தனித்தனி கூட்டுக. கழை - மூங்கில். பரி - செலவு. தாழ் - தாழக்கோல். புகர் - புள்ளி. மரத்தைக் கூட்டிச் செய்த யானை என்க. செறுவுபு - அடக்க. உறுமுரண் - மிக்கபோர். காழ்த்தல் - வைரங் கொள்ளல்.