உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           சேறல் வலியாச் செய்கை நோக்கி
          வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல்
    90    கேட்டுப்பொரு டெரியுமோர் வேட்டுவ முதுமகன்
          பெருமக னென்னப் பெறலருங் கலத்தோ
          டொருமக னுளவழி யெதிர்த்து மம்மகன்
          நடுங்குதுய ருறுத்துங் கடுங்க ணாண்மையன்
          ஆண்மை யழிய நாண்மீக் கூரி
    95    மெய்ப்பொரு டுணர்ந்து கைப்படு நமக்கெனக்
          காட்டக மருங்கி னல்லது மற்றவர்
          நாட்டகம் புகுத னன்கிருள் கழியினும்
          இல்லை யெழுகெனச் செல்வோர் முன்னர்
 
               (நிமித்திகன் கூற்று)

                 88 - 98: செய்கை..........முன்னர்ப்

 
(பொழிப்புரை) அப்பொழுது அவ்விடத்தே சிறிய புதுப் பறவை யொன்று வாயான் ஒலித்த சிறந்த நிமித்தமாகிய குரலைக் கேட்டு அக்குழுவின்கணின்ற நிமித்தகனாகிய ஒரு முதிய வேடன் அக்குரலை நிமித்தமாகக் கொண்டு ஆராய்பவன் ஏனைய வேடர் செயலை நோக்கி 'நண்பரீர்! இப்புட்குரலால் உறுபயன் கூறுவல் கேண்மின்! நாம் இப்பொமுதே பெறுதற்கரிய பேரணிகலன்களோடு அரசன் போல்வான் ஒருவனை அவனிருக்குமிடத்தே சென்று காண்போம். அவனோ அஞ்சி நடுங்கும்படி நம்மைத் துன்புறுத்துதற்குரிய தறுகண் மறப்பண்பும் உடையனே யாவான் கண்டீர்! அங்ஙனமாயினும் நம் முன்னே அவன் மறங்கெடா நிற்றலாலே நாணமிகுந்து அவன் கைப்பொருளையெல்லாம் நமக்குக் கொடுத்துத் தானும் நம் கையகப்படுவான் காண்!' என்று கூற அது கேட்ட அவ்வேடர்கள் 'அப்படியாயின் இவ் வழியே சென்ற அவர் தாமும் இப்பொழுது இருள் நன்கு புலர்ந்து விட்டதாயினும் இக்காட்டின் கண்ணே இருத்தல் அல்லது காடு கடந்து நாட்டின்கண் சென்றதில்லை! எல்லீரும் விரைந்து எழுமின் என்று கூறிச் செல்லா சென்றவர் முன்பு என்க.
 
(விளக்கம்) புள் வாய் வீச்சுறுகுரல் என மாறுக. புதுப்புள் என்றது அப்பாலைக் கருப்பொருளல்லாத பிறதிணைக்குரிய பறவை என்றவாறு. பறவை செய்யும் ஒலியினை வீச்சு என்றல் மரபு. 'மேல் புறத்தில் ஆந்தையிட்ட வீச்சு நன்றம்மே!' என்பது குற்றாலக் குற வஞ்சி. (54.) வேட்டுவ முதுமகன் - கிழவேடன். பெருமகன் - அரசன். எதிர்த்தும் - எதிர்ப் படுவேம். மீக்கூரி - மிகுந்து. நாட்டகம் புகுத லில்லை என்றது நாட்டிற் சென்றிருத்தல் இயலாது என்றவாறு.