உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
55. சவரர் புளிஞர் வளைந்தது |
|
பிடிமுதற் கொண்டுமல ரடிமுத
லொற்றிச்
செல்வோர் கதுமெனச் செம்மலைக்
கண்டே கல்லெனத்
துவன்றிக் கார்கிளர்ந் ததுபோல்
ஆர்ப்பும் வீளையு மவ்வழிப் பரப்பிக்
115 கார்க்கலைக் கோட்டொ டார்ப்பொலி
மயங்கி அரவச்
செய்கையர் வெருவரத் தாக்க்
|
|
(வேடர் உதயணனைக்
கண்டு தாக்குதல்)
111 - 116:
பிடி..........தாக்க
|
|
(பொழிப்புரை) பிடியானை வீழ்ந்த இடந்தொடங்கிப் பின்னர்
மலர் போன்ற வாசவதத்தை முதலியோரின் அடிச்சுவட்டினை ஆராய்ந்து
அச்சுவட்டின்மேற் செல்லாநின்ற அவ்வேடர் ஞெரே லென ஆங்கு இருந்த உதயணனைக்
கண்டு கல்லென்னும் ஆர வாரத்தோடே ஒருங்கு கூடி முகில் கிளர்ந்தாற் போன்று
கிளர்ச்சி யுற்று ஆரவாரத்தையும் சீழ்க்கையொலியையும் அவ்விடமெல்லாம்
பரப்பிக் கரிய மான்கொம்பாகிய ஊது கொம்பை ஊதுதலோடு தம்
ஆரவாரத்தையும் விரவிய முழக்கச் செயலையுடையோராய் எத்தகை யோர்க்கும்
அச்சமுண்டாகும்படி தாக்கத் தொடங்க என்க.
|
|
(விளக்கம்) கதுமென: விரைவுக்குறிப்பு. செம்மல்: உதயணன்.
கல்லென: ஒலிக்குறிப்பு. கார் - முகில். வீளை - சீழ்க்கை. இது
கீழ் மக்கட்கு மகிழ்ச்சி தோன்றுங்கால் அவர் தம்முதட்டை
மடித்தெழுப்பும் ஒரு வகையொலி. கலைக் கோடு - மான்கொம்பாகிய
ஊது கருவி. அரவம் - ஒலி.
|