உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           கோல வுருவொடு குன்றிடைப் போந்தவோர்
          காலன் கொல்லிவன் கானத் தோர்க்கெனப்
          பன்முகத் தானும் பற்றடைந் தன்னவன்
          வின்முகம் புகாஅர் வேட்டுவ ரஞ்சிப்
    150    புட்கூற் றாளனை யுட்கூற் றாகி
          அழித்தனை கொணர்ந்தெனப் பழித்தனர் கழறி
          உளைப்பொலி மான்றே ருதயண குமரனை
          வளைத்துநின் றனரால் வலிப்பது தெரிந்தென்.
 
                (வேடர்கலங்கிக் கூறல்)

                 146 - 153: கோல..........தெரிந்தென்

 
(பொழிப்புரை) 'இவன் இக்காட்டிலே உறையும் நம்மனோரைக் கொன்று குவித்தற் பொருட்டுத் தனக்கியல்பான அஞ்சுதகு உருவத்தை மறைத்துக்கொண்டு கண்டோர் கண்கவரும் அழகுடைய உருவத்தோடே இம்மலை நிலத்திலே வந்த கூற்றுவனேயோ? அறிகின்றிலேமே!' என்று மருண்டு அஞ்சி உதயணன் வின்முன்னர்ச் செல்லாராய்ப் பலதிசைகளினும் ஓடி மரங் கல் முதலிய மறைவிடங்களில் மறைந்தவராய் நின்று முன்னர் புண்ணிமித்தம் கூறிய முதிய வேட்டுவனை நோக்கி "அறிவிலியே ! நீ எமக்குள்ளேயே இருந்து எம்மைக் கொல்லும் கூற்றுவனேயாகி நிமித்தங் கூறுமாற்றால் ஈண்டுக் கொணர்ந்து அழித்தொழிந்தனையே!" என்று பழித்து இழித்துரைத்துப் பின்னரும் பிடரி மயிராலே பொலிவுறும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறும் இயல்புடைய அவ்வுதயணகுமரனை எவ்வாறேனும் பற்றிக் கொள்ளற்கு வழி ஆராய்ந்து கொண்டு தொலைவிலேயே அவனைச் சூழ்ந்து நிற்பாராயினர் என்க.
 
(விளக்கம்) கோலவுரு - காண்போர் கண்கவரும் அழகிய உருவம். கானத்தோர் - காட்டிலுறைவோர். பன்முகத்தானும் - பலதிசைகளினும். வின்முகம் - வில்லின் எதிரே. பற்று - மறைந்துய்தற்கு இயன்ற புகலிடம். புட்கூற்றாளன் - நிமித்திகன். உட்கூற்று - தமக் குள்ளேயே தோன்றிய கூற்றுவன். கழறி - இடித்துரைத்து. உளை - பிடரிமயிர். வலிப்பது - பற்றிக் கொள்வது. தெரிந்து - ஆராய்ந்து கொண்டு.

55. சவரர் புளிஞர் வளைந்தது முற்றிற்று.