உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
     40     கழைவளர் கானங் கடுந்தீ மண்ட
           முழைவயிற் போதரு முளையெயிற் றிடிக்குரற்
           புலவும் புலிபோற் பொங்கழல் புதைஇய
           இலவஞ் சோலையி னிறைமகன் போதர
           ஆளி கண்ட வானை யினம்போல்
     45    வாளி வல்வில் வயவர் நீங்கச்
           சில்லிருங் கூந்தலை மெல்லென நடாஅய்
 
              (இதுவுமது)
        40 - 47: கழை..........படுத்தலின்
 
(பொழிப்புரை) மன்னன் மகனாகிய உதயணன் பின்னர் மூங்கில் வளராநின்ற காட்டிலே தீப்பற்றி எரிதலாலே குகையினின்றும் வெளிப்படாநின்ற முளைபோன்ற பற்களையும் இடி போன்ற குரலையும் உடைய புலானாற்றம் வீசுகின்ற புலிபோன்று மிக்க நெருப்பு எழுந்து மறைத்த அவ்விலவஞ் சோலையினின்று புறப்படா நிற்ப, அத்தோன்றலைக் கண்ட அம்பையும் வலிய வில்லையுமுடைய அந்த வேடர் யாளியைக் கண்ட யானைக் கூட்டம் போன்று அஞ்சி அகலா நிற்ப வெல்லும் போர்த்திறலுடைய உதயணன் அச்செவ்வியிலே சிலவாகிய கரிய கூந்தலையுடைய வாசவதத்தையைக் காஞ்சனமாலையோடு மெல்ல இயங்குவித்து வெளியிடத்தே ஒருசார் கொணர்ந்து விடுத்தலாலே என்க.
 
(விளக்கம்) கழை வளர்காடு - மூங்கிற் காடு. முழை வயின் - குகையினின்றும். முளை - மூங்கின் முளை முதலியன. புலவும் - புலானாறும். இறைமகன்: உதயணன். யாளி ஒருவகைச் சிங்கம். இதனை அத்தியாளி சில்லிருங் கூந்தலை: வாசவதத்தை.