உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           அரணிடை யகற்றி யச்ச நீங்கி்
           முரணுடை வேட்டுவர் மூழ்த்தனர் மூசி்
     50    முன்னும் பின்னும் பக்கமு நெருங்கிப்
           பொன்னணி மார்பன் போர்த்தொழி லடங்கக்
           கலையுணர் வித்தகர் கைபுனைந் தியற்றிய
           சிலைநா ணறுத்தலிற் செய்வதை யின்றி்
 
            (வோடர் செயல்
          48 - 53: அரணிடை..........இன்றி்
 
(பொழிப்புரை) வலிமையுடைய அவ்வேடர் உதயணன் முதலியோரை இவ்வாறு பாதுகாவலான இடத்தினின்றும் நீக்கித் தம் அச்சத்தையும் அகற்றி அவரைச் சூழ்ந்து மொய்த்து முன்னும் பின்னும் பக்கங்களினும் நெருக்கிப் பொற்கலன் அணிந்த மார்புடைய உதயணனது போர்த்தொழில் இல்லையாகும்படி விற்கலையை நன்குணர்ந்த சதுரப்பாடுடையோர் ஒப்பனை செய்து இயற்றிய அவனுடைய வில்லினது நாணை அறுத்து விட்டமையானே உதயணன் பின்னர்ச் செயலற்று என்க.
 
(விளக்கம்) அரண் - பாதுகாப்பான இலவஞ் சூழல். முரண் - வலிமை. மூழ்த்தனர் - வளைந்து மூசி - மொய்த்து. பக்கம் - வலமும் இடமுமாகிய பக்கங்கள். மார்பன்; உதயணன். அடங்க - இல்லையாகும்படி. கலை - விற்கலை. சிலை - வில். செய்வதை என் புழி ஐகாரம்: சாரியை.