உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
85
சொற்பொருள் கேட்டே விற்றொடை
மடக்கி
அறவரை யிழந்த செறுநரை
விலக்கிக்
குறவருட் டலைவன் குருசிலைக்
குறுகி யாரே
நீரெமக் கறியக்
கூறென
வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப
|
|
(வேடர்
தலைவன் உதயணனை
வினவுதல்) 85
- 89: சொற்பொருள்..................கேட்ப்
|
|
(பொழிப்புரை) உதயணன் கூறிய
சொல்லையும் அவற்றின் பொருளையும் நன்கு கேட்டுணர்ந்த அவ்வேடருள்
தலைவனாகிய வேடன் தனது வில்லையும் அம்பையும் போர்த் தொழிலினின்றும்
மீட்டுக்கொண்டு அறத்தின் எல்லையைக் கடந்து உதயணன்மேற்
சீறாநின்ற பகைக் குணமிக்க ஏனைய வேடரை யெல்லாம் விலக்கித் தான்
தமியனாக உதயணனை அணுகி "இளைஞனே! நீ யார் என்பதனை எமக்கு விளங்கும்படி
கூறுக!" என்று வீரருள்ளும் தலைசிறந்த வீரனாகிய அவ்வுதயணனை அவ்வேட்டுவன்
வினவா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) தலைவன்
உதயணன் கூறிய மொழிகளையன்றிப் பொருளையும் நன்குணர்ந்தான் என்பது
தோன்றச் சொற்பொருள் கேட்டு என்றார். சொல்லைப் பொருள்
உணர்ச்சியோடு கேட்டு என்றவாறு. அறவரை - அறத்தின் எல்லை. அஃதாவது
படைக்கலன் இழந்தோர் மேல் படை விடுதல் என்க செறுநர் - பகைவர்.
குருசில்- உதயணன். வீரருள் வீரன் என்றது ஆசிரிய
ரிரங்கியது.
|