உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           வளங்கெழு வத்தவன் வாணிக ரெனவே
           உளங்கழிந் தூர்தரு முவகைய ராகிக்
           கொல்லாத் தொழிலினர் கொலைப்படை யகற்றி
           வல்லாண் டோன்றலை வடகம் வாங்கிக்
     100    கையாப் புறுத்துக் காட்டிய வெழுகென
 
          (வேடர் செயல்)
        96 - 100: வளங்கெழு.... .....எழுகென
 
(பொழிப்புரை) வளம் பொருந்திய வத்தவ நாட்டு மன்னன் வாணிகர் யாமென்று உதயணன் கூறவே இவர்பால் அரும்பொருள் இருத்தல் ஒருதலையென்னுங் கருத்தாலே நெஞ்சத்தினின்றும் வெளிப்பட்டுக் கண்ணினும் முகத்தினும் மெய்ப்பாடாகப் பரவா நின்ற பேருவகையையுடையராய் அவ்வேடர் இவரைக் கொலை செய்யும் முயற்சியைக் கைவிட்டவராயக் கொல்லும் படைக்கலங்களாகிய வில்லையும் அம்பறாத்தூணியையும் உதயணன்பானின்று நீக்கி வலிய ஆண்மைமிக்க தலைவனாகிய உதயணனை அவனுடைய மேலாடையையே எடுத்து அவனிருகைகளையும் சேர்த்துக் கட்டி "வணிகனே ! அப்பொருட் புதையலை எமக்குக் காட்டற்கு எழு வாயாக!" என்று அழையாநிற்ப என்க.
 
(விளக்கம்) கேட்டவுடனே மகிழ்ந்த அவ்வேடர் மகிழ்ச்சி புறத்தார்க்குப் புலனாம்படி அவர்தம் கண்ணினும் முகத்தினும் மெய்ப்பாடாதப் படர்தலின். உளங்கழிந்தூர்தரும் உவகையர் என்றார். உதயணன் பாலிருந்த நாண் அற்ற வில்லையும் அம்புகளையும் கொலைப் படை என்றார் ஆசிரியர் தம்மிரக்கந்தோன்ற வல்லாண் தோன்றலைக் கையாப்புறுத்து என்றார். வல்லாண் - வலிமை மிக்க ஆண்மைத் தன்மையுடைமை. "வல்லாண்முல்லை" என வாகைத்திணையில் ஒரு துறையுண்மையும் நினைக. வடகம் - மேலாடை. காட்டிய - காட்ட. எழுகவென எனற்பாலது செய்யுள் விகாரத்தால் எழுகென என்றாயிற்று.