உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           உய்ம்மருங் குபாயத்துப் பொய்ம்மருங் கோடி
           அழல்வழி வந்தியா மசைந்தனம் வதி்ந்த
           பொழில்வயிற் புதைத்தனம் புகற்கரி தாகத்
           தெரிவில் கொள்கையி னெரிதலைக் கொளீஇயினிர்
     105    அவ்வழ லாறு மாத்திர மிவ்வழி
           நின்மி னீரென மன்ன குமரன்
           தெளியக் கூறப் புளிஞர் தேறி
 
          (உதயணன் கூற்று)
           101 - 107 : உய்.........தேறி
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் அப்பொழுதைக்கு அவரிடம் தாம் உய்தற்குரிய பகுதியிலே தோன்றிய உபாயமாகிய பொய்யின் பகுதியிலே மனம் விரைந்து செல்லாலே "வேட்டுவரே வெப்பமிக்க இப்பாலை நிலவழியிலே யாங்கள் நடந்து வந்து இளைப்புற்றுத் தங்கிய இவ்விலவஞ் சோலையின்கண் நிலத்திற் புதைத்தேம். நீயிர் அச்சோலையில் இப்போது யாரும் புகுதற்கு இயலாதபடி இஃது தெரியாத கொள்கையோடு தீயினை மூட்டி விட்டீர். அந்த நெருப்பு ஆறுமளவும் இவ்விடத்திலே நில்லுங் கோள்!" என்று அவ்வேடர் ஐயுறாமல் தெளியும்படி மிகவும்சதுரப்பாட்டோடு கூறாநிற்ப. அதுகேட்ட வேடரும் அவன் கூற்றை வாய்மையென்றே தெளிந்து என்க.
 
(விளக்கம்) உய்ம்மருங்கு - உய்தற்குரிய பகுதி. பொய் கூறுதல் அவற்கியல்பன்மை தோன்றப் பொய்ம்மருங்கேடி என்றார். அழல் வழி - அழலுகின்ற பாலைவழி. அழல் போன்ற வழி எனினுமாம். எரி - தீ. நீர் நின்மின் என்க. மன்னகுமரன் : உதயணன். 'பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே!' எனவரும் வெற்றிவேற்கைக்கு உதயணன் கூற்றுச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைதல் நினைக.