உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           மாழ்கிய மாதரை வாங்குபு தழீஇக்
           கனவளைப் பணைத்தோட் காஞ்சன மாலை
     120    புனவளைத் தோளி பொழிலகங் காவனம்
           பெருமான் செல்வம் பேணாய் மற்றிவ்
           வரிமா னன்னோற் காருயிர் கொடீஇய
           போந்தனை யோவெனத் தான்பா ராட்டி
           இரங்குவது நோக்கி யிறைமகன் கூறும
 
          (காஞ்சனை வருந்தல்)
           118 - 124: மாழ்கிய..........கூறும்
 
(பொழிப்புரை) கனவிய வளையலணிந்த மூங்கில்போன்ற தோளையுடைய காஞ்சனமாலை இங்ஙனம் மயங்கிய வாசவதத்தையைத் தன் கையாற்றாங்கித் தழுவிக் கொண்டு நீரிற் றோன்றிய சங்க வளையலை யணிந்த தோளினையுடைய எம்மிறை மகளே ! உலகத்தைக் காவல் பூண்ட நம்பெருமானுடைய சிறந்த செல்வங்களைப் பொருட்படுத்தாமல் அந்தோ ! இந்த அரிமான் போலும் உதயணன் பொருட்டு இவ்வேடர்பால் உயிர் கொடுக்கத்தான் ஈங்கு வந்தாயோ? என்று கூறிப் பாராட்டி இரங்குதலைக் கோமகனாகிய உதயணன் பார்த்து வேடரை நோக்கிக் கூறுவான்; என்க.
 
(விளக்கம்) மாதர் - வாசவதத்தை. பொழில் - உலகம் : ஆகு பெயர். நம்பெருமான் - பிரச்சோதனன். அரிமானன்னோன் - உதயணன். கொடீ இய - கொடுக்க. தான் - அசை. இறைமகன் : உதயணன்.