உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
      125   வருந்துத றவிரயாம் வழியிடைப் புதைத்த
           அருங்கலப் பேரணிப் பெருங்கலக் கருதின்யாப்
           புறுமுறை பின்னிடத் தறிமின் மற்றிவள்
           நீப்பருந் துயர நெறிவயி னோம்பித்
           தீப்புகை தீர்தலுங் காட்டுதுஞ் சென்றெனக்
 
          (உதயணன் கூற்று)
       125 - 129: வருந்துதல்..... .....சென்றென்
 
(பொழிப்புரை) அன்புடையீர் ! யாங்கள் வழிமருங்கே புதைத்து வைத்த பெறுதற்கரிய பேரழகுடைய பெரிய அணிகலன்களைப் பெறுவது கருதியே என் கைகளைக் கட்டுகின்றீராயின் இவள் வருந்துதல் தவிர்தற் பொருட்டு இப்பொழுது இச்செயலைச் செய்யாது விடுங்கோள். யாம் இவளுடைய நீத்தற்கரிய துன்பத்தை இவ்வழியிடத்திருந்தே போக்கி இந்நெருப்பின் புகை ஒழிந்தவுடனே அவ்விடத்திற்கு நும்மை அழைத்துச் சென்று அப்பொருளைக் காட்டுவேம்; காட்டாவிடின் கைகளைக் கட்டு முறையைப் பின்னர்ச் செய்து காணுங்கோள் !" என்று வேண்டா நிற்ப, என்க.
 
(விளக்கம்) இப்பொழுது இவள் வருந்துதல் தவிரக் கட்டுதலைப் பின்னிடத்தே அறிமின் என்றமையால் இப்பொழுது கட்டாதொழி மின் என்றனாயிற்று. பின்னிடம் - காட்டாதொழியின் அப்பால் என்றவாறு, நெறிவயினிருந்தே ஓம்பி என்க. கட்டுவீராயின் இவள் இறந்துபடுவள். பின்னர் யாமும் இறப்பேம்; அங்ஙனம் நிகழின் நுங்கருத்து நிறைவேறாது போதலும் கூடும் என்பது குறிப்பாலுணர்த்திய பொருளென்க. பின்னிடத்தறிமின் என்றது நீங்கள் கட்டாதுவிடினும் யாங்கள் நும்மோடிருத்தலன்றிப் பின் என்செய்ய வல்லேம் என்றுணர்த்தற்கென்க. இங்ஙனம் வேண்டியது வாசவதத்தை துன்பந் தீர்தற் பொருட்டென்க.