உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
     135    வாவிப் புள்ளின் றூவி விம்மிய
           அணைமிசை யசைந்த வம்மென் சிறுபுறம்
           மணன்மிசை யசைந்து மாக்கவின் வாட
           அறியாது வருந்திய வாருயிர்த் துணைவியைப்
           பொறியார் தடக்கையிற் போற்றுபு தழீஇப்
     140    பூங்குழல் குருசி றேங்்கொளத் தீண்ட
           நீலத் தண்மலர் நீர்ப்பட் டனபோல்
           கோலக் கண்மலர் குளிர்முத் துறைப்ப
           அவலங் கொள்ளு மவ்வரைக் கண்ணே
 
          (உதயணன் செயல்)
         135 - 143: வாவி..........கண்ணே
 
(பொழிப்புரை) நீர் நிலையிலே தாமரைப்பூவிலே உறைகின்ற அன்னப் பறவையின் மெல்லிய மயிரைத் தொகுத்துச் செறிக்கப் பட்டுப் புடைத்த அணையிலே சாய்ந்து பயின்ற தனது அழகிய மெல்லிய புறக்கழுத்து இப்பொழுது மணலின்மேலே கிடந்து தனது பேரழகு வாடவும், தன் துயராகிய அதனைச் சிறிதும் அறியாதவளாய்க் காதலனாகிய உதயணன் துயர்க்கே பெரிதும் வருந்தாநின்ற தனது அரிய உயிர்த்துணைவியாகிய வாசவதத்தையை அவ்வுதயண குமரன் தனது நல்லிலக்கணவரியமைந்த பெரிய கையினாலே பேணித் தழுவியவனாய், அவளது அழகிய கூந்தலை உடல் புளகமேறி இன்புறும்படி மெல்ல நீவா நிற்றலாலே நீரின் முழுகி அணந்த கருங்குவளையாகிய குளிர்ந்த மலர் நீர் துளித்தாற் போன்று தனது அழகிய கண்ணாகிய செந்தாமரை மலர்கள் இன்பக் கண்ணீராகிய குளிர்ந்த முத்துக்களை உதிர்ப்பவும், பின்னரும் அவலமே கொள்ளா நிற்கும் அந்தப் பொழுதிலே என்க.
 
(விளக்கம்) வாவிப்புள் என்றது சிறப்பால் அன்னத்தை உணர்த்தியது. வாவியில் வாழும் அன்னப்பறவைகள் பொழிலிலே புகுந்து ஆணும் பெண்ணுமாய்த் தம்முட்காதலுற்றுப் புணருங்காலத்தே அவ்வின்பவுணர்ச்சியாலே அவற்றின் உடலினின்றும் உதிரா நின்ற மெல்லிய மயிர்களைத் தொகுத்துச் செறிக்கப்பட்டமையாலே புடைத்துள்ள அணையென்பது கருத்து. இங்ஙனம் அணையியற்றுதலை, "துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணையணை" எனவரும் இளங்கோவடிகள் வாக்கானும்; இதற்கு அடியார்க்கு நல்லார் தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சியான் உருகி உதிர்த்த வயிற்றின் மயிர் எஃகிப் பெய்த பல்வகை அணைமீதே' என்றெழுதிய இனிய உரையானும் (சிலப் - 4; 66 - 7. உணர்க. மாக்கவின் - பேரழகு, மாமைக் கவினுமாம் தன்றுயர் அறியாமல் காதலன் துயர்க்கே வருந்திய உயிர்த்துணைவி யென்க. இதனை,

    "இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித் தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி"

எனவரும் கவுந்தியடிகளார் பாராட்டுரையோடு (சிலப். 15: 137-41.) ஒப்பு நோக்குக. பொறி - நல்லிலக்கணமாகிய வரிகள் (இரேகை) தேம் இனிமை. நீர்ப்பட்டனவாகிய நீலத்தண்மலர் பின்னர் நீர் துளிப்பதுபோல என்க. இன்பக் கண்ணீர் என்பார் குளிர்முத்து என்றார். மலர் ஈண்டுத் தாமரை மலர் தாமரை மலரின்கண் முத்துப் பிறக்கும் என்பதுபற்றி கண்மலர் குளிர்முத்துறைப்ப என்றார். உறைப்பவும் எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது உதயணன் கைதீண்டலாலே உள்ள முருகி இன்பக் கண்ணீர் உகுத்தாளேனும் அவலம் பிறத்தற்குரிய சூழ்நிலை மாறாமை யானே மீண்டும் அவலமே கொண்டனள் என்க. அவ்வரைக்கண் - அப்பொழுதில்.