உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           கவலை யுள்ளமொடு கங்குற் போகிய
     145    வயந்தக குமரன் வந்துகாட் டொதுங்கிக்
           கன்றொழி கறவையிற் சென்றவ ணெய்திக்
           காப்புடை மூதூர்க் கடைமுகங் குறுகி
 
         (வயந்தகன் இடபகன்பாற் செல்லல்)
             144 - 147: கவலை..........குறுகி
 
(பொழிப்புரை) இனி, படையும் ஊர்தியும் கொணர்தற் பொருட்டு இரவிலே பிரிந்து போன வயந்தகன், காட்டினூடே வந்து தன் கன்று அக்காட்டின்கண் தான் அறியாதபடி ஒதுங்கி விட்டமையாலே அக்கன்றை ஒழிந்து செல்லும் கறவையான் போன்று பெரிதும் கவலையுடைய நெஞ்சத்தோடு சென்று புட்பக நகரைத்தையடைந்து காவலையுடைய பழைய அந்நகரத்தின் பெரு வாயிலை எய்தாநிற்ப என்க.
 
(விளக்கம்) காட்டொதுங்கிக் கன்றொழியப்பட்ட கறவை போன்று கவலையுள்ளமொடு சென்று என்க. கறவை-ஆன். செய்யுளாகலின் அவண் என்னும் சுட்டுப் பெயர்முன் வந்தது. மூதூர் - புட்பக நகரம், கடை முகம் - வாயில். குறுகி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்ச மாக்குக.