உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           யாப்புடை நண்பி னேற்றுப் பெயரன்
           வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வரப்
     150    பெருநலத் தானைப் பிரச்சோ தனன்றமர்
           இருநிலக் கிழமை யேய ரிறைவன்
           வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்
           ஒன்றிய நண்பு மூக்கமு முயர்ச்சியும்
           ஒழுக்க நுனித்த வுயர்வு மிழுக்கா
     155   அமைச்சி னமைதியு மளியு மறனும்
           சிறப்புழிச் சிறத்தலுஞ் சிறந்த வாற்றலும்
           வெங்கோல் வெறுப்புஞ் செங்கோற் செல்வமும்
           செருக்கிச் செல்லுஞ் செலவின னென்றுதம்
           தருக்கிய தலைத்தாட் டானைச் செல்வப்
     160    பெருமகற் றெளீஇத்தம் மருமதி மேம்படக்
 
            (இதுவுமது)
        148 - 160: யாப்புடை..........தெளீஇ
 
(பொழிப்புரை) அத்தலைவாயிலின்கண், பெரிதும் தொடர்புடைய நண்பனாகிய இடபகன் வைகறையாமம் கழிந்து இருள் புலராநின்ற விடியற்காலத்தே தன்னை மறவர்பலர் சூழ்ந்து வாரா நிற்பவந்து பெரிய நிலத்தை ஆளும் உரிமையுடைய ஏயர்குலத் தோன்றலாகிய உதயணவேந்தன் வெற்றியும் மறமும் சிறப்புமிக்க வித்தையும் உளங்கலந்த நட்புப்பண்பும் ஊக்கமும் உயர்ச்சியும் ஒழுக்கத்தையே உயிராகக்கருதிய உயர்வும், பிழைபடாத அமைச்சர் தமக்கமைந்த அமைதியும் அருளும் அறமும் சிறக்கவேண்டிய விடத்தே சிறந்த சிறப்புடைமையும் அதற்கேற்ற ஆற்றலும் கொடுங்கோன்மையில் வெறுப்பும் செங்கோலாகிய செல்வத்தின் பால் விருப்பும் ஆகிய பெறலரும் பண்புகளனைத்தும் தன்பாலமையப் பெற்றமையாலே மிகவும் செருக்கி ஒழுகும் ஒழுக்கமுடையவனாக இருக்கின்றனன் என்று பெரிய நலமுடைய படைகளையுடைய பிரச்சோதன மன்னனுடைய அமைச்சர்கள் இயல்பாகவே தருக்கியிருக்கின்ற தலைமைத் தன்மையுடைய முயற்சியினையுடைய படைகளையுடைய செல்வமிக்க அம்மன்னன் நம்பும்படி எடுத்துக் கூறி என்க.
 
(விளக்கம்) யாப்பு - தொடர்பு. ஏற்றுப் பெயரன்: இடபகன். வைகு- வைகறை. வைகு மிருள்புலர் விடியலுமாம். வயவர் - மறவர். தமர் : அமைச்சர். நிலக்கிழமை - நிலத்தையாளும் அரசுரிமை ஏயர் இறைவன்; உதயணன். விறல் - மறமுடைமை. விஞ்சை - வித்தை. உளம் ஒன்றிய நண்பென்க. உயர்ச்சி மக்களுள் எல்லாம் உயர்ந்து தோன்றும் பண்புடைமை யென்க. பெருமையுமாம். ஒழுக்கத்தை உயிராக நுனித்த உயர்வு என்க. சிறக்கவேண்டிய வீரமுதலியவற்றில் சிறத்தல் என்க. வெங்கோல் வெறுப்பும் என்றமையானே செங்கோன்மைச் செல்வத்தை விரும்பும் என்க. அரசற்கு எல்லாச் செல்வத்திற்கும் காரணமாதல் பற்றிச் செங்கோலையே செல்வம் என்றார். ஆகிய இவற்றாலே செருக்கி என்க. தருக்கிய பெருமகன் தானைச் செல்வப் பெருமகன் எனத் தனித்தனி இயைக்க.