உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
     160    பெருமகற் றெளீஇத்தம் மருமதி மேம்படக்
           கய்ந்நவி லாளனை யெஃகுள் ளடக்கிய
           பொய்ந்நிலங் காட்டின ரென்பதோர் பொய்ம்மொழி
           வெந்நில மருங்கின் வேட்டுவ ரெல்லாம்
           போற்றா துரைத்த மாற்றம் பட்டதை
     165    நிலைக்கொண் டமைந்து நிரம்பாத் தந்நிலம்
           கலக்க மறிந்த கவற்சிய னாகி
           மன்னுயிர் காவலற் கம்மொழி மெய்யெனின்
           இன்னுயிர் துறக்குமென் றெண்ணருஞ் சூழ்ச்சியன்
           உற்றதை யுணரு மொற்றா ளிளையனை
     170    வருகென நின்றோன் வயந்தகற் கண்டே
 
            (இதுவுமது)
         160 - 170: தம்மருமதி.........நின்றோன்
 
(பொழிப்புரை) தங்களுடைய அரிய அறிவு மேம்பாடுற்றுத் தோன்றுதற்பொருட்டு அவன் உடன்பாடு பெற்றுத் தம் கையிலகப்பட்டுப் பயிலாநின்ற அவ்வுதயணனை வேலேந்திய மறவரை உள்ளே மறைத்து வைக்கப்பட்ட நிலவறையினூடே உய்த்துக் கொன்றொழித்தனர் என்னும் ஒரு பொய்ம்மொழி, பாலை நிலத்தே வாழும் வேட்டுவரெல்லாம் தம் வாய் காவாதுரைத்தது பரவியதனைக் கேட்டு மன்னனை யிழந்தமையாலே இன்னும் நன்னிலை கொண்டு அமைந்து நிரம்பாத தங்காவலிலுள்ள நாடு கலங்கா நின்ற கலக்கத்தைத் தான் அறிந்தமையாலே உண்டான கவலையையுடையவானாகி "நிலை பெற்ற உயிரினத்தைக் காக்குந் தொழிலையுடைய உதயணன் திறத்திலே எழுந்த அம்மோழி தான் ஒரோ வழி மெய்யாயிருக்குமாயின் யாமெல்லாம் இனிய உயிரை நீத் தொழிவேம் என்னும் முடிவுடையனாய் அச்செய்தி பற்றி எண்ணிய அரிய சூழ்ச்சியுடையனாய்ப் "பிரச்சோதனன் நகரத்தே சென்று உதயணன் திறத்திலே ஆங்கு நிகழ்ந்ததனை உணர்தற்குரிய ஒற்றன் ஒருவனை அழைத்து வருக" என்று பணியாளரை ஏவி அவன் வருகையை எதிர் பார்த்து நின்றவன் என்க.
 
(விளக்கம்) தம்மரசன் பகைவனைக் கொல்வதனால் தமது அறிவு மேம்பட்டுத்திகழும் என்பது கருதி உதயணனைக் கொன்றனர் என்பது கருத்தென்க. கை - காய் : போலி. கைந்நவிலாளன் - தம் கையிலகப் பட்டுப் பயில்கின்ற உதயணனை என்க. எஃகு - வேல். ஆகுபெயராய் மறவரையுணர்த்தியது. பொய்ந்நிலம் உட்பொய்யாகிய நிலம். நிலவறையென்க. பொய்ந்நிலங் காட்டினர் என்றது. நிலவறையைக் காட்டி அதனுட் புகுவித்துக் கொன்றனர் என்றவாறு. பிரச்சோதனனுடைய அமைச்சர் தங்கள் புகழ் ஓங்கும் பொருட்டு உதயணனைப் பெரிதும் செருக்குடையன் என்று கூறி அவன் உடன்பாடு பெற்று நிலவறையிற் செலுத்திக் கொன்றனர் என்னுமொரு பொய்ம்மொழி வேடர்பானின்றும் பரவியது. அம்மொழிகேட்டு நாட்டுமக்கள் பெரிதும் கலங்கினர் இதனை இடபகன் அறிந்து வருந்தினன் என்பது (150-169.) இப்பகுதியின் கருத்து. வெந்நிலம் - பாலைநிலம். மாற்றம் -செய்தி உதயணன் சிறைப்பட்டமையால் இன்னும் நிலைக்கொண்டமைந்து நிரம்பாத்தந்நிலம் என்க. மன்னுயிர்காவலன் : உதயணன். ஒற்றுத் தொழிலை மேற்கொண்ட இளைஞன் என்க. வருகென ஆள்விடுத்து அவன் வரவை எதிர்பார்த்து நின்றவன் என்க.