உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           சிறைகொண் மன்னவன் றுறைகொள் விழவினுள்
           இகழ்வொடு பட்ட வியற்கை நோக்கிப்
           பவழச் செவ்வாய்ப் பாவையைத் தழீஇ
           இருளிடைப் போந்தது மிரும்பிடி யிறுதியும்
     180    இற்ற விரும்பிடிப் பக்க நீங்கலும்
           தெருளக் கூறித் தீதில் காலத்துப்
           பெருமுது தேவி யுரிமைப் பள்ளியுள்
           செருமுரட் செல்வன் பெருவிரல் பிடித்தவற்
           கறியக் கூறிய வடையாண் கிளவியும்
     185    செறியச் செய்த சிறப்பு மாண்மையும்
           அருந்தொழி லந்தணன் சுருங்கச் சொல்லலும்
 
         (வயந்தகன் உதயணன் கூறியவற்றை இடபகனுக்குக் கூறுதல்)
               176 - 186: சிறை..........சொல்லலும்
 
(பொழிப்புரை) வயந்தகன், உதயணனைச் சிறைபிடித்த பிரச்சோதன மன்னவன் திருநீர் விழவுக் காலத்தே சோர்ந் திருத்தலை அறிந்த உதயணன் அம்மன்னன் மகளாகிய பவழம் போன்று சிவந்த வாயையுடைய வாசவத்த்தையைக் கைப்பற்றிப் பிடிமிசை யேற்றி இருளிலே தன்னூர் நோக்கி வந்ததனையும், பெரிய பிடியானை பிணிப்பட்டு வழியிலே வீழ்ந்து இறந்ததனையும், இறந்த அக்கரிய பிடியானையின்பானின்று காலானடந்து நீங்கி வந்ததனையும், அவ்விடபகன் அறியும்படி விளக்கமாகக் கூறிப் பின்னர்த் தீதொன்று மில்லாதிருந்த பண்டைக் காலத் தொரு நாள் போர்வலிமையுடைய உதயணமன்னன் இடபகனுடைய பெரிய விரல்களைத் தன் கையாற் பற்றிக்கொண்டு முதுமையுடைய தன் தாயாகிய கோப்பெருந்தேவி வதிந்த உவளகத்தூடே அழைத்துச் சென்று ஆங்கு அவ்விடபகனுக்கு உதயணன் தமர் பகைவர் என்று அறிதற் பொருட்டுக் கூறிய அடையாள மொழிகளையும், அவ்வுதயணன் இடபகனை யானை யேற்றியும் அணிகலன் அணிந்தும் நிரம்பச் செய்த சிறப்புகளையும் மறச்சிறப்புகளையும் செயற்கரிய அமைச்சுத் தொழிலை யுடைய அந்தணனாகிய அவ் வயந்தகன் சுருங்கக் கூறி விளக்குதலும் என்க.
 
(விளக்கம்) சிறைகொண் மன்னவன் : பிரச்சோதனன். துறை கொள்விழவு - திருநீர் விழா. இகழ்வு - பொச்சாப்பினால் உற்ற சோர்வு. பாவை : வாசவதத்தை. தீதில் காலம் என்றது, உதயணன் சிறைப்படுதற்கு முந்திய காலத்தை. உரிமைப்பள்ளி - உவளகம் (அந்தப்புரம்) பெருமுதுதேவி என்றது, மிருகாபதியை. அடையாண் கிளவி - அடையாளச் சொல். அந்தணன் : வயந்தகன்.