|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 56. வென்றி யெய்தியது | |
இடபகன் படையோ டெழுந்தன னாகி் விண்ணோர் விழையுஞ் செண்ணக் கோலத்துக் கண்ணிய செலவிற் கஞ்சிகை வையம் 195 கண்ணி சூட்டிக் கடைமணை பூட்டி் வண்ண மகளிர் கண்ணுறக் கவினிய உழைக்கல மேந்தி யுழைப்படர்ந் தியலப் பொற்கலத் தியன்ற நற்சுவை யடிசில்
நோக்கிக் காப்புப்பொறி யொற்றி யாப்புற வேற்றித் 200 தனிமை யெய்திய மன்னனுந் தையலும்
அணியுங் கலனு மகன்பரி யாளமும் துணிவியல் சுற்றமுந் தொடர்ந்துடன் விட்டுப் பின்வர வமைத்து முன்வரப் போகி
| | (இதுவுமது)்)
192 - 203: விண்ணோர்..........போகி
| | (பொழிப்புரை) தேவர்களும் விரும்புதற்குக் காரணமான ஒப்பனை அழகோடு ஊர்வோர் கருதுதற் கேற்ப இயங்கும் இயக்கத்தையும் உருவு திரைகளையும் உடைய வண்டிகளிலே மலர்மாலைகளையும் சூட்டிக் கடைமணையையும் பூட்டி ஒப்பனை செய்யும் வண்ண மகளிர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகான உழைக்கலங்களைக் கையிலேந்திக் கொண்டு பக்கங்களிலே வாராநிற்பப் பொற்கலத்திலே பெய்துவைக்கப்பட்ட இனிய சுவையுடைய அடிசிற்குப் பாதுகாவலாகிய இலச்சினையும் இட்டு அவ்வண்டியிலே பொருத்தமுற ஏற்றிக் கொண்டு ஆங்குப் பாலைநிலத்திலே தனிமையுற்றிருக்கிற உதயணமன்னனும் வாசவதத்தையும் அணிதற்கு ஏற்ற பேரணி கலன்களும், விரிந்த பரிவாரங்களும், ஆராய்ந்து துணியும் இயலினையுடைய தன் அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவும் அவ்வண்டியைத் தொடர்ந்து பின்னே வரும்படி விட்டு அவ்வண்டி முன்னே செல்லுமாறு சென்று என்க.
| | (விளக்கம்) செண்ணம் - ஒப்பனை. கண்ணிய - கருதிய. கஞ்சிகை வையம் - திரையிட்டு மறைத்த வண்டி. கடைமணை - வண்டியின் ஓருறுப்பு. வலவர் இருக்கும் மணைபோலும். வண்ணமகளிர் - ஒப்பனை செய்யும் பணி மகளிர். உழைக்கலம் - பக்கத்திலேயே இருக்க வேண்டிய பொன் முதலியவற்றாற் செய்த கலங்கள். பொறி - இலச்சினை. மன்னனுந் தையலும்: உதயணனும் வாசவதத்தையும் பரியாளம் - பரிவாரம் மன்னர்க்கு அணுக்கராய் நின்று குற்றேவல் செய்யும் பல்வேறு தொழிலுடைய கூட்டம். இவரை எண் பேராயத்தார் என்ப. இவ்வெண்பேராயம் இன்ன வென்பதை ''சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுகநெய், ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்" என்பதனான் உணர்க. (சிலப் - 5: 157 - குறிப்புரை.) இனி, "கரணத் தியலவர் கரும காரர், கனகச் சுற்றம் கடை காப்பாளர். நகரமாந்தர் நளிபடைத்தலைவர், யானை வீரர் இவுளிமறவர், இனையர் எண்பேராயம்" எனக் காட்டுவர் அடியார்க்கு நல்லார் (சிலப் ஷ அடியார்......உரை.)
துணிவியல் சுற்றம் என்றது - ஐம் பெருங்குழுவினை. ஐம்பெருங்குழு "அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற்றூதுவர் சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப் படுமே" என்பதனால் (சிலப் - 5: 157 - அடியார்க்கு நல்லார் உரைமேற்கொள்) உணர்க. இவற்றுள் ஆராய்ந்து துணியும் அமைச்சர் குழுவே முதன்மைத்தாகலின், இவர் துணிவியற் சுற்றமும் என்றார். இடபகன் உதயணன் அமைச்சனாயினும் அரசுரிமை பூண்டு புட்பகத்திருந்து செங்கோல் நடாத்தலின் ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இவனுக்கும் உளவாயின என்க.
(வயந்தகன் உதயணனைக் காணாமல் வருந்தல்)
|
|