உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           நடுக்க மெய்தக் குடைப்பெருந் தானை
           வத்தவ ரிறைவனு மெய்த்தகைத் தாகத்
     245   தமர்மேல் வந்தமை தானகத் தடக்கி
           நுமரோ மற்றிவர் பிறரோ தாமெனக்
           கவர்கணை மொய்த்த கானத் திடைமறைத்
           தெம்முயிர் காமி னெனவே யாங்கவர்
 
             (உதயணன் செயல்)
        243 - 248: குடை..........எனவே
 
(பொழிப்புரை) கொற்றக் குடையையும் பெரிய படையையும் உடையவத்தவநாட்டிறைவனாகிய உதயணகுமரன்றானும் வாய்மை யாகவே தன் சுற்றத்தாராகிய இடபகனும் படைமறவரும் அவ் வேடர் மேல் வந்துற்ற செய்தியைத் தன் உள்ளத்திலேயே அடக்கிக்கொண்டு அவலமுறுகின்ற அவ்வேடரை நோக்கி "வேடர்காள்! ஆரவாரத்தோடு வருகின்ற இந்தப் படைவீரர் நுங்கள் சுற்றத்தாரோ? அன்றி நும் மாற்றாராகிய மறவரோ? கூறுமின்" என்று வினவிப் பின்னரும் "அந்தோ! உயிர் கவரும் கணைகள் யாண்டும் மொய்யாநின்ற இக்காட்டிலே எளியேமாகிய எங்களை நல்ல அரண்களிலே சேர்த்தி மறைத்துவைத்து எங்கள் இன்னுயிரைப் பாதுகாவல் செய்யுங்கோள்!" என்று வேண்டா நிற்பவே என்க.
 
(விளக்கம்) மெய்த்தகைத்து: ஒருசொல், வாய்மையாகவே. தமர் - உறவுடையோர். நுமர் - நும்முறவினர். கவர்கணை: வினைத்தொகை. கணை - இடபகன் படைஞர் விடுகணை. அவர் - அவ் வேடர்.