உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
           வஞ்சமில் பெரும்புகழ் வத்தவ ரிறைவனும்
     10    நெஞ்ச மகிழ்ந்து நீத்துமிக வுடைய
          துன்பப் பெருங்கடற் றுறைக்கட் பொருந்திய
          இன்பப் பெரும்புணை யாயினி ரெமக்கென
          அன்புடை யருண்மொழி நன்புபல பயிற்றி
          ஆர்வத் தோழரை யார்த லாற்றான்
     15    வீரத் தானை வேந்தன் விரும்பி
          நறைமலர்ச் சோலை யிறைகொண் டிருப்பப்
 
                (உதயணன் செயல்)
           9 - 16 :  வஞ்சமில்..........இருப்ப
 
(பொழிப்புரை) வஞ்சமற்ற பெரிய புகழையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனும் அன்பு செழுமிய நண்பரைக் கண்டமையாலே பெரிதும் மனமகிழ்ந்து "அன்புடையீர்! நீயிர் நீந்து தலை மிகவும் உடையதாகிய எனது துன்பமாகிய பெருங்கடலை யாம் இனிதே கடத்தற்கு எமக்குத் துறையிலே யமைந்த இன்பமே தரும் பெருய தெப்பமே ஆயினிர்" என்று அன்புடைய அருள் மொழிகளாகிய நன்மையுடையன பலவற்றையும் பல்காலும் கூறியும், ஆர்வமிக்க அந்நண்பரைக் கண்ணால் நுகரும் வேட்கை தணியானாகி மறமிக்க படையையுடைய அவ்வேந்தனாகிய உதயணன் அயலிலே உள்ள தேன்பிலிற்றும் மலர் மிக்கதொரு சோலையிலே தங்கியிரா நிற்ப என்க.
 
(விளக்கம்) வஞ்சகச்செயல்களைச்செய்தும்சிலர்புகழ்தேடுதல் உண்மையின் உதயணன் புகழ் மெய்ப்புகழ் என்பார் வஞ்சமில் பெரும்புகழ் என்றார். அன்புடைமையாலே தோன்றிய அருண்மொழி என்க. நன்பு - நன்மை, ஆர்தல் - நோக்கானுகர்தல். இறை கொண்டு - தங்குதலை மேற்கொண்டென்க. இதன்கண் உதயணன் கூறும் முகமன்மொழிகள் பெரிதும் இன்பந்தருதலுணர்க.