உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
         
     40    மணிக்கலப் பேழையு மணிக்கண் ணாடியும்
           மணிதிகழ் விளக்கு மயிர்வினைத் தவிசும்
           இருக்கைக் கட்டிலு மடைப்பைத் தானமும்
           செங்கோ டிகமும் வெண்பாற் றவிசும்
           முட்டிணை வட்டும் பட்டிணை யமளியும்
     45    ஆல வட்டமு மணிச்சாந் தாற்றியும்
           மாலைப் பந்து மேனைய பிறவும்
           ஏந்திய கையர் மாந்தளிர் மேனி
           மடத்தகை மகளிர் படைப்பொலிந் தியல
 
                   (இதுவுமது)
              40 - 48 :  மணி..........இயல
 
(பொழிப்புரை) மணிக்கலன்களையுடைய பேழையும்மணிகள் பதித்த கண்ணாடியும், மணிகள் பதித்துத் திகழாநின்ற விளக்கும், கூந்தலைக் கைசெய்தற்கிருக்கும் தவிசும், இருத்தற்குறிய கட்டிலும், அடைப்பை வைக்கும் பீடமும், சிவந்த பொன்னணிகலச் செப்பும், வெள்ளிய பால் போன்ற நிறமுடைய தவிசும், பொருந்திய இரட்டை வட்டுக்களும், பட்டாலியன்ற இரட்டைக் கட்டிலும், ஆலவட்டமும், மணிபதித்த கைப்பிடியமைந்த சாந்தாற்றியும், மலர்மாலையாலியன்ற பந்தும், இன்னோரன்ன பிறவுமாகிய பொருள்களை ஏந்திய கையையுடைய மாந்தளிர் மேனியையும் மடப்பத்தையுமுடைய பணிமகளிர் படையோராக விளக்கி என்க.
 
(விளக்கம்) மயிர்வினைத்தவிசு - கூந்தல் ஒப்பனை செய்யுங்கால் அக்கூந்தலையிட்டு வைத்துக் கோடற்குரிய தவிசுமாம். அடைப்பை வைக்கும் பீடத்தைத் தானம் என்றார். கோடிகம் - அணிகலப்பேழை. படையாகப் பொலிந்தென்க.