உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            புற்றகத் தொடுங்கி முற்றிய காலை
           ஈரம் பார்க்கு மீயற் கணம்போல்
           நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை
     75    மீட்டிடம் பெற்றுக் கூட்டிடங் கூடிக்
           கடிதுசெ லியற்கைப் பிடிமிசை யிருந்த
           வருத்த மறிந்து மருத்துவர் வகுத்த
           அரும்பெற லடிசி லிவிழ்பதங் கொள்ளும்
           பெரும்பக னாழிகை பிழையா தளக்குநர்
     80    செவ்வி யறிந்து கவ்விதின் மொழிய
 
                    (இதுவுமது)
            72 - 80 :  புற்றகத்து.........மொழிய
 
(பொழிப்புரை) புற்றினூடே அடங்கியிருந்து முதிர்ந்துழி வெளிப்படற்கு ஈரமுண்டாதலை எதிர்பார்த்திருக்கும் ஈயற் கூட்டம் போன்று அரசனைத் தாம் சென்று காண்டற்குரிய செவ்விநோக்கி அது பெறுமளவும் அரண்மனையகத்தே அடங்கி யுறைபவரும் நெடிய புகழையுடைய அரசனைத் தாம் கூட வேண்டிய செவ்வியிலே கூடி மீளவேண்டிய இடம் பெற்று மீளவும் விரைந்துசெல்லும் இயல்புடைய பிடியானை மீதிருந்து விரைந்து யாத்திரை செய்தமையாலுண்டான உதயணனுடைய உடல் நலிவினை அறிந்து மருத்துவ நூல்வல்லுநர் அந்நோய்க்கு மருந்தாக வகுத்துத் தந்த பெறலரிய உணவினை அவன் உண்டற்குரிய பொழுதினை அறிதற்பொருட்டுப் பெரிய பகலினது நாழிகையைத் தப்பாது அளந்து காணும் நாழிகைக் கணக்கர் உணவுண்ணும் பொழுதினையறிந்து பொருத்தமாகக் கூறாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) முற்றிய காலை - பறத்தற்குரிய இறகு முளைத்து முதிர்ந்த பொழுது என்க. ஈரம் - மழைஈரம். புற்றிலடங்கிய ஈயல் இறகுமுளைக்கப் பெற்று மழைபெய்யும் செவ்வியை எதிர் பார்த்திருந்து பெய்தவுடன் புறப்படுதல் இயல்பு. இச்சிலதரும் அரசன் பணிக்கு எதிர்பார்த்திருந்து அவன் அருள் பெற்றவுடன் அவன்பாற் சென்று பணிபுரிவர் என்றவாறு. கூட்டிடம் - கூடுமிடம். மீட்டிடம் - மீளுமிடம் என்க. கூட்டிடம் கூடி மீட்டிடம் பெற்று என மாறி மீளாநிற்பவும் என ஒரு சொல் வருவித்துக் கொள்க. வருத்தமறிந்த அதற்கு மருந்தாக மருத்துவர் வகுத்துத் தந்த அடிசில் என்க. அவிழ்பதம் - சோறு. கவ்விதின் - பொருத்தமாக. கவ்வுதல் - பொருந்துதல். ஆசிரியர் பரிமேலழகர் இச்சொல் கவ்வை என்பதினின்றும் தோன்றிய தென்பர். கவ்வுதல் என்னும் வினையடியாகப் பிறந்த சொல்லென்றலே பொருத்தமாக விருக்கின்றது. பரிமேலழகர் கூறும் பொருள் இந்நூலில் இச்சொல் வரும் மூன்றிடங்களினும் பொருந்தாமை யுணர்க, (பெருங்கதை 1 - 57: 80; 2 - 6: 61; 5 - 1-27) மேலும் - திருக்குறளிலும் (1144) கவ்வையாற் காமம் கவ்விது என்புழியும் அலராலே காமம் மேலும் பெரிதும் கவ்வுதலையுடையதாயிற்று என்றலே நன்கு சிறத்தலுணர்க.