உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            நிறைந்துவர் நறுநீர் சிறப்பொ டாடிய
     90    தாமரை முகத்தியைத் தமனியப் பாவையிற்
           காமர் கற்சுனைத் தானமுத னிறீஇத்
           தன்ன மகவயிற் றவாஅத் தாதைக்கு
           முன்ன ரெழுந்த முழுக்கதம் போலப்
           புறவயிற் பொம்மென வெம்பி யகவயின்
     95    தண்மை யடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர்
           வரிவளைப் பணைத்தோள் வண்ண மகளிர்
           சொரிவன ராட்டித் தூசுவிரித் துடீஇக்
           கோங்கின் றட்டமுங் குரவின் பாவையும்
           வாங்கிக் கொண்டு வாருபு முடித்து
 
           (வாசவதத்தை நீராடன் முதலியன)
              89 - 99 :  நிறை...........முடித்து
 
(பொழிப்புரை) சாலின்கண்பத்துவகைத்துவரையும்எஞ்சா திட்டு ஊறவைத்த நறிய நீரின்கண் சிறப்போடு நீராடிய செந்தாமரை மலர் போன்ற முகத்தையுடைய வாசவதத்தையைப் பொற்பாவைபோல விருப்பம் வருதற்குக் காரணமான கற்கனையிடத்தே நிறுத்தி வைத்துத் தன் மகவின்பால் அன்பகலாத தந்தைக்கு அம்மகவின் பிழைகாரணமாக முற்பட்டெழுந்த பெரிய வெகுளியைப்போன்று புறத்தே பொம்மென்று கொதித்து அகத்தே குளிர்ச்சியை அடக்கிக் கொண்டிருக்கின்ற நுண்ணிய தொழிற்றிற மமைந்த சாலின் கண்ணமைந்த தெளிந்த நீரை வரிகளமைந்த வளையலணிந்த மூங்கில் போன்ற தோள்களையுடைய வண்ணமகளிர் முகந்து திருமேனியிற் சொரிந்து நீராட்டிப் பின்னர்ப் புதிய ஆடையை விரித்து உடுத்துக் கூந்தலை நீரற வாரிக் கோங்கமலரும் குரவமலரும் கொய்து அக்கூந்தலிலிட்டு முடித்து என்க.
 
(விளக்கம்) முன்னர்த் துவர் நீராட்டிப் பின்னர் நறு நீராட்டினர் என்பது கருத்து. நிறை - சால். துவர் பத்து என்ப; அவையாவன: "பூவந்தி திரிபலை புணர்செங் கருங்காலி நாவலொடு நாற்பான் மரமே" என்பன. (சிலப் - 6: 76 அடியார்க்குநல்லார் உரை மேற்கோள்) சிறப்பு என்பது தெய்வம் தொழன் முதலியன என்க. முகத்தி: வாசவதத்தை. தமனியப் பாவை - பொன்னாலியன்ற பாவை. சுனைத்தான முதல் - சுனையிடத்தில். தன்ன: அகரம் ஆறனுருபு, தாதைக்கு மக்கள் மீது எழும் வெகுளிபோல நீர் புறத்தே வெம்பி அகத்தே தண்ணென்றிருந்தது என்னும் இவ்வுவமை நினைந்தின்புறுக. கதிரவன் ஒளியிலே சாலின் நீரைப் பெய்து சுடவைத்தலாலே புறம் வெம்பி அகந்தண்ணென்றிருந்தது என்றபடி தூசு - பருத்தி நூலாடை. உடலின் ஈரம் போக்கற்கு இவ்வாடையே ஏற்றதாதலறிக. கோங்கின் மலரைத் தட்டம் என்றும், குரவமலரைப் பாவை என்றும் வழங்குதல் மரபு. வாருபு - வாரி.