உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
58. சயந்தி புக்கது |
|
புதைகுப் பாயத்துப் பூண்ட வாளிற்
25 கடுங்கட் காவலர் கொடுங்கோடு
சிலைப்ப
எப்பான் மருங்கினு மொய்ப்புற்று
விளங்கிக்
கிழியிடம் பெறாஅர் வழியிடம்
பார்ப்ப
யானையும் புரவியுஞ் சேனையுஞ்
செல்ல
விடற்கருந் தோழர் புடைக்களி றேற
|
|
(கவலர் முதலியோர்
செயல்)
24 - 29: புதை..........ஏற்
|
|
(பொழிப்புரை) உடலை மறைக்கும்
மெய்ப்பையையும் ஏந்திய வாட்படையையும் கடிய நோக்குடைய கண்ணையும்
உடைய காவலாளர் வளைந்த ஊது கொம்புகளை ஒலித்தலானே நான்கு
திசைகளினும் மாந்தர் வந்து நெருங்கி இயங்குதற்கு வெற்றிடம் பெறாராகிச்
செல்லுதற்கு வழிகளை ஆராயாநிற்பவும், யானைநிரலும் குதிரையணியும் படைகளும்
அவ்வொலி கேட்டவுடனே புறப்பட்டுச் செல்லாநிற்பவும், உதயணனை
விட்டு நீங்குதற்கியலாத நண்பராகிய வயந்தகனும் இடபகனும் அவ்வுதயணன் ஏறிய
களிற்றின் இருபக்கத்தும் நிறுத்தப்பட்ட இருவேறு களிறுகளிலேயும் ஏறா
நிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) புதைகுப்பாயம் : வினைத்தொகை. உடலைப் புதைக்கும் குப்பாயம் என்க.
குப்பாயம் - மெய்ப்பை (சட்டை) கோடு - ஓர் இசைக் கருவி.
இக்கருவி புறப்பாட்டிற்கு அறிகுறியாக ஒலிக்கப் பட்டன என்பது
கருத்து. இங்ஙனம் ஊதுதலைச் சின்னம் பிடித்தல் என்ப. சிலைப்ப-ஒலிப்ப.
கிழியிடம்: வினைத்தொகை; வெற்றிடம். கொம்பூதியவுடன் முன்னர்
அணிவகுத்துநின்ற யானை, புரவி, காலாட்படை மூன்றும் செல்லத்
தொடங்கின என்க. தோழர் - வயந்தகனும் இடபகனும். புடைக்களிறு -
பக்கத்தே நிற்குங் களிறு.
|