உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
     30     அந்தண் பொதியிற் சந்தன மரமும்
           நறுந்தண் சோலை யிருங்காற் றிமிசும்
           அடவி விந்தத் தியானை மருப்பும்
           வடதிசை மாமலைச் சுடர்விடு பொன்னும்
           குடகடற் பிறந்த படர்கொடிப் பவழமும்
     35    தென்றிசைப் பிறந்த வெண்சுடர் மணியும்
           விஞ்சையம் பெருமலை விளங்கொளி வெள்ளியும்
           இலங்கை யீழத்துக் கலந்தரு செப்பும்
           இமயத்துப் பிறந்த வயிரச் சாதியும்
           கடாரத் திரும்பொடு கையகத் தடக்கி
 
             (அரும்பொருள்கள்)
        30 - 39: அந்தண்..........அடக்கி
 
(பொழிப்புரை) அழகும் குளிர்ச்சியுமுடைய பொதியமலையிலே பிறந்த சந்தனமரமும், அம்மலையிடத்தே நறிய குளிர்ந்த சோலையாய்த்திகழும் பெரிய அடியினையுடைய திமிசமரமும், விந்தமலைக் காட்டிற் பிறந்த யானைக் கோடும், வடதிசைக்கண்ணதாகிய மேரு மலையிடத்தே பிறந்த ஒளிவீசும் பொன்னும், மேற்றிசைக் கடலிலே பிறந்த படருகின்ற கொடியாகிய பவழமும், தென்கடலிலே பிறந்த வெள்ளிய ஒளியுடைய முத்தும், வித்தியா தரர் மலையிலே பிறந்த வெள்ளியும், இலங்கை என்னும் ஈழநாட்டினின்றும் மரக்கலத்திலே கொணர்ந்த செம்பும், இமயமலையிலே பிறந்த வயிரமணி வகையும், கடாரநாட்டிற் பிறந்த இரும்பும், ஆகிய இவ்வரும் பொருள்களை யெல்லாம் தம்பாற்கொண்டு என்க.்க.
 
(விளக்கம்) பொதிய முதலிய இடம் அவ்வப்பொருள்கட்குச் சிறந்த இடம் என்க. பொதியமலைச் சந்தனமும் திமிசும் என்க. விந்தத்தடவி என மாறுக. வடதிசைமாமலை என்றது மேருமலையினை, தென்றிசை-தென் கடல். வெண்சுடர்மணி - முத்து. விஞ்சையம் பெருமலை - விச்சாதரர் மலை; அஃதாவது வெள்ளிமலை என்க. இலங்கைஈழம்: இருபெயரொட்டு, கலம் - மரக்கலம். கடாரம் - பர்மியநாடு. இதனைக் காழகம் என்றும் வழங்குப.