உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
     40    யவனத் தச்சரு மவந்திக் கொல்லரும்
           மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
           பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
           கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும்
           வத்த நாட்டு வண்ணக் கம்மரும்
     45    தத்தங் கோண்மேற்றங் கைத்தொழி றோன்ற
 
          (பலநாட்டுக் கைத்தொழிலாளர்)
            40 - 45: யவன..........தோன்ற
 
(பொழிப்புரை) யவன நாட்டுத் தச்சரும், அவந்திநாட்டுக் கொல்லரும், மகதநாட்டிலே பிறந்த மணித் தொழிலாளரும், பாடலிபுத்திர நகரத்தே பிறந்த பசிய பொற்கொல்லரும், கோசல நாட்டிலே பிறந்த ஓவியத் தொழிலாளரும், வத்தவநாட்டிலே பிறந்த வண்ணத் தொழிலாளரும் தங்கள் தங்கள் கொள்கையின் படி தங்கள் தங்கள் கைத் தொழிற்றிறம் தோன்றும்படி யென்க.
 
(விளக்கம்) யவனமுதலிய நாட்டிலே தோன்றியவர் நிரலே தச்சுத் தொழில் முதலியவற்றிற் தனிச்சிறப்புடையோர் என்பது கருத்து. முற் கூறப்பட்ட மரம் முதலிய பொருள்களைக் கொண்டு இத்தொழிலாளர் அனைவரும் ஒன்றுகூடித் தத்தம் திறந்தோன்ற இயற்றிய வையம் என இயையும். பாடலி - பாடலிபுத்திரம் என்னும் ஒரு நகரம். வண்ணக் கம்மர் - வண்ணம் தீற்றுவோர்.