உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           ஆரமுஞ் சூட்டு நேர்துணைக் குழிசியும்
           அச்சு மாணியும் வச்சிர யாப்பும்
           அகவாய்க் கோடும் புறவாய்ப் பூணும்
           பத்திரப் பந்தமுஞ் சித்திரப் புளகமும்
     50    புறமணைப் பலகையு மகமணைத் தட்டும்
           சந்திக் கோணமு மெந்திர வாணியும்
           கஞ்சிகைக் கொளுவோடு கயிற்றுநிலை யமைத்து
           மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ
           முகத்தூ ணளவு மகத்தூ ணமைதியும்
     55    நூலிட் டமைத்த கோலக் கூடத்து
 
          (வாசவதத்தைக் குரிய வண்டியின் உறுப்புகள்)
                46 - 55: ஆரமும்...........கூடத்து
 
(பொழிப்புரை) ஆரக்கால்களும், சூட்டும், ஒன்றொடு ஒன்று ஒத்த இரண்டாகிய குடங்களும், அச்சும் ஆணியும் வச்சிர நூலிற் கூறப்பட்ட கோவைத் தொழிலும், உள்ளிடத்துக் கோடும், புறத்துப் பூண்களும், இலைத் தொழிற் கட்டும், சித்திரமுடைய கண்ணாடியும், புறத்தமைந்த மணைப்பலகையும், அகமணையாகிய தட்டும், சந்திகளாகிய மூலையமைதியும், பொறியாணியும், உருவு திரைக் கொக்கியும் கயிறு கட்டும் உறுப்பும், அமைத்து மூக்கணையும், தண்டும், கோக்கு முறையிற் கோத்து முகப்புத் தூணின் அளவும், அகத்தூண் அளவும், நூல்பிடித்து அழகாக அமைக்கப்பட்ட கூடத்தினையும் என்க.
 
(விளக்கம்) ஆரம்-சக்கரத்திலுள்ள ஆரக்கால்கள். குழிசி-சக்கரத்தின் நடுவமைந்த குடம் என்னும் உறுப்பு. வச்சிரயாப்பு - உறுதியான கோவைமுறையுமாம். வச்சிரம் - சிற்பநூல் முப்பதிரண்டுள் ஒன்று. எனவே அந்நூன்முறைப்படி கோத்த கோவை யெனினுமாம். கோடு - தண்டு. பத்திரப்பந்தம் - இலையடுக்குப் போன்றதோர் அடுக்குமுறை. புளகம் - கண்ணாடி புறமணை - வலவனிருக்கும் பலகை அகமணையாகிய தட்டு என்க. கொளுவு - கோக்கி; இக்காலத்தார் கொக்கி என்பதுமது. எருதுகளின் கயிற்றைக் கொளுவுமிடம் என்க. மூக்கு - மூக்கணைமரம். கோடு - பழுத்தண்டுகள். கூடம் - வண்டியின் அகத்தமைந்த அறை.