உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           உலைவி லூர்ச்சி வலவன் காத்தலிற்
           புதுத்துணை மகளி ரொதுக்குநடை யேத்தக்
           காஞ்சன மாலை பூம்புறத் தசைஇ
           மாசில் விண்ணவன் மடமகள் போல
     75     வாசவ தத்தை வைய மேறக்
           கோற்றொழி லாளர் மாற்றுமொழி யியம்பக்
           கொடிபல நுடங்கக் குன்றஞ் சிலம்ப
           இடியுறழ் முரசி னிருங்க ணெருக்கிக்
 
           (வாசவதத்தை வைய மேறல்)
            71 - 78: உலைவில்.........எருக்கி
 
(பொழிப்புரை) கெடுதலில்லாத ஊருந் தொழிலையுடைய வலவன் தனது வரவிற்குக் காத்து நிற்றலாலே, புதுவோராகிய தோழிமார் தனது ஒதுங்கி நடக்கும் அடியீட்டினை ஏத்தாநிற்ப, உசாத்துணையாகிய தன் தோழி காஞ்சனமாலையின் அழகிய முதுகிலே சாய்ந்தவளாய்க் குற்றமற்ற தேவனுடைய இளமகன் போன்று வாசவதத்தை அவ்வழகிய வண்டியிலேறாநிற்பப் பிரப்பன் கோல் பிடித்த காவலர் வழியி னிற்போரை அகற்றுதற்குரிய மொழிகளைக் கூறி வழி விலக்கவும், கொடிகள் பலவும் ஆடாநிற்பவும், மலைகளிலே எதிரொலி எழும்படி இடியை ஒத்த முழக்கத்தையுடைய முரசங்களின் பெரிய கண்களிலே குறுந்தடி கொண்டு புடைத்து முழக்க என்க.
 
(விளக்கம்) ஊர்ச்சி - ஊருந் தொழில். வலவன் - பாகன். வாசவதத்தையின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நிற்றலின் என்க. நடையேத்துதல் - அடியிடுந்தோறும் வாழ்த்துதல். மாற்றுமொழி - வழி விலக்கும் மொழி. எருக்கி - எருக்க; முழக்க வென்க.