உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           தந்திறை தந்து முந்துசிறைப் பட்ட
     90    அற்ற காலத்து முற்ற நோக்கி
           அடியுறை செய்தொழிற் குடிமுதல் பிழைத்தல்
           இருநிலம் பெயரினு மெம்மாட் டிலவெனப்
           பெருமகன் றமரொடு தெளிவனர் தேற்றி
 
             (இதுவுமது)
       89 - 93: முந்து சிறை.........தேற்றி
 
(பொழிப்புரை) உதயணன் தமராகிய இடபகன் வயந்தகன் முதலியோரைக் கண்டு வணங்கி "நம்பெருமான் பிரச்சோதன மன்னனாலே முன்னாச்சிறைப்பட்டதனாலே ஆட்சியற்ற காலத்தேயும் அடியேமாகிய யாங்கள் எங்கள் கடமைகளை முழுமையாகப் பார்த்து யாங்கள் செய்தற்குரிய தொழும்புத் தொழிலைச் செய் திருந்ததன்றி அடியேங்கள் நம் பெருமானின் குடமக்களாந் தன்மையிலே பிழை செய்திலேம். அங்ஙனம் பிழைசெய்தல் இப்பேருலகே நிலைபெயர்வதாயினும் அடியேங்களைபால் இலவாம் என்றுணர்த்தித் தமது தன்மையை அவர் தெளிவாராகக் கூறித் தெளிவித் தென்க.
 
(விளக்கம்) சிறைப்பட்டமையால் ஆட்சி அற்ற காலத்தும் என்க. முற்றநோகுதலாவது - தங்கள் கடமைகளை முழுதுறப் பார்த்தல். அடியுறை என்றது அடியேம் என்றவாறு. குடிமுதல் - குடியாந் தன்மையில் பிழைத்திலேம்; பிழைத்தல் எம்மாட்டில் என்க. தமர் - இடபகன் முதலியோர். அவர் தெளியும்படி என்க.