உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           அரிலற லகவயி னாடுத லானா
     100    வரியகட் டலவன் வள்ளுகி ருற்றெனக்
           கன்னி வாளை யுண்ணா தொடுங்கும்
           தண்பணை தழீஇய வண்பணை வளநா
           டருமிளை யுடுத்த வமைவிற் குன்றாது
           பெருமலை சூழ்ந்த வரிதிய லமைவோ
     105    டிழிக்கப் படாஅ வெழிற்பொலி வெய்திப்
           பெருமண் ணுவாவும் பேராப் பல்படை
           உருமண் ணுவாவுக் குரிமையி னிருந்த
           சயந்தியம் பெரும்பதி யமர்ந்துபுக் கனரால்
           இயைந்த செம்மையொ டியைந்திசி னோரென்.
 
             (இதுவுமது)
       99 - 109: அரில்............இயைந்திசினோரென்
 
(பொழிப்புரை) நீர்ப்பூங்கொடிகள் பிணங்கிய நீரின்கண் ஆடுதலை யொழியாத வரியுடைய வயிற்றையுடைய நண்டினது கூரிய நகம் தன்மேலுற்ற தாகக் கன்னிமைத் தன்மையுடைய பெண் வாளை நாணுற்று இரையுண்ணாமல் ஒடுங்கிக் கிடக்கின்ற கழனிகள் சூழ்ந்த வளவிய மருதப் பரப்பினையுடைய வளநாட்டோடு அம் மருதத்தின்கண் கடத்தற் கரிய மிளை சூழ்ந்த அரிதாக இயற்றப்பட்ட அரண்மனை அமைதியையும் உடைத்தாய், யாவரானும் புகழப்படுதலே யன்றி இகழப்படாத அழகாலே பொலிவுற்றுப் பெரிய நிலவுலக மெல்லாம் நிரம்பும் பெருமையுடைய பிறக்கிடாத நாற்படைமையும், உடைய உருமண்ணுவா என்னும் அமைச்சனுக்கு அரசுரிமையோடிருந்த சயந்தி என்னும் பெரிய நகரத்தின் கண் பொருந்திய நிடுநிலையோடு கெண்மை கொண்டுள்ள உதயணனும் வாசவதத்தையும் ஏனையோரும் விரும்பிப் புகாநின்றனர் என்க.
 
(விளக்கம்) அரில் - கொடிப்பிணக்கம்; ஈண்டு நீரப்பூங்கொடிப் பிணக்கம். அறல் - நீர். வரி - கோடு. அகடு - வயிறு, அலவன் - நண்டு. கன்னித்தன்மையுடைய பெண்வாளை என்க. நாட்டோடு மிளையுடுத்த அமைதியோடும் பொலிவெய்தி இருந்த சயந்தி என்க. பெருமண் - உலகம். உவாவும் - நிரம்பும். அமர்ந்து - விரும்பி. இயைந்திசினோர் - இயைந்தோர்.

58. சயந்தி புக்கது முற்றிற்று.
---------------------------------------------
பெருங்கதை உஞ்சைக் காண்டத்திற்குப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் எழுதிய உரையும் விளக்கமும் முற்றியன.