உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
         
     10    எண்வகைதச் சிறப்பொடு கண்அணங் கெய்த
          விடாஅ விளக்கொளி வெண்பூந் தாமமொடு
          படாகைவும் விதானமும் பாற்கடல் கடுப்ப
          இருமயிர் முரசம் உரும்என உரறக்
          கடமுழக் கின்னிசை இடைஇடை இயம்ப
 
        10 - 14 ;  எண்வகைச் சிறப்பொடு,,,,,,,இடைஇடை இயம்ப
 
(பொழிப்புரை)   கடவுளர்க்குச் செய்யும் எட்டுவகைச் சிறப்புப் பொருள்களுடன் கண்டோர் கண்கள் ஒளி குறைந்து. வருத்தமுற, உடையாரய், நுந்தா விளக்கும்   வெண்ணிற மலர் மாலைகளும் ஏந்தியவாரய், அடையாளப்   பெருங்கொடியும் மேற்கட்டியும் உயர்த்தி், விழாமுரசம் இடிபோல முழங்கவும், குடமுழா முதலிய இன்னிசைக் கருவிகள் இடந்தோறும் இடந்தோறும். முழங்காநிற்பவும் என்க.
 
(விளக்கம்) 10, எண்வகைச் சிறப்பு - அருகக் கடவுளுக்குச் செய்யப்படும் எட்டுவகைச் சிறப்புக்கள். அவை ; தூபதீபக் காட்சி. தேவதுந்துபி, தெய்வத் துவனி, சிங்காதனம், பிண்டி, வெண்சாமரை,   மலர்மழை, மும்மைக் குடை என்பன. 'முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' (குறள். 388)  என்பவாகலின் இறைவனுக்குரிய சிறப்புக்கள் உதயணனுக்கும் பொருந்துவனவாயின என்க.
    10 - 11, கண் அணங்கு எய்தும்படி ஒளிரும் ஒளியினின்றும் தவிராத ஒளி விளக்கு என்க. எனவே நுந்தாவிளக்கு என்பதாயிற்று. அணங்கு - வருத்தம்.
    11. மங்கலமாலையாதலின் வெண்பூந்தாம் எனப்பட்டது,
    12, படாகை - அடையாளக்கொடி; பெருங்கொடியுமாம், விதானம் - மேற்கட்டி; பந்தருமாம். பாற்கடல் போன்று தோன்றும்படி எடுத்தென்க,
    13. இருமயிர் முரசம்-கரிய மயிரினைச் சீவாது போர்த்த முரசம்; 'புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக்.கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி, அதன் உரிவையை மயிர்சீவாமற் போர்த்த முரசு' என்றவாறு; என்னை ? 'புனைமருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருதுவென்ற, கனைகுரல் உருமுச் சீற்றக் கதழ்விடையுரிவை போர்த்த துனைகுரல் முரசம் '  என்றார் பிறரும் (சீவகசிந்தாமணி - 2896)
       உரும்-இடி. உரற-முழங்க.
    14. கடம்-குடமுழா. இன்னிசைக் கருவியாகலின் வேறு கூறினார். குடமுழா முதலிய இன்னிசைக் கருவிகள் என்க. இடை - இடம் அடுக்குப் பன்மை பற்றி வந்தது. இயம்ப-முழங்க.