உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
            . . . . ... .. ,.,.... .. ..,..ளுட்கா தொழுகிற்
      25    பகைவர் எண்ணம் பயமில என்னும்
            நீதிப் பெருமைநூல் ஓதியும் ஓராய்
            யானை வேட்கையிற் சேனை நீக்கிப்
            பற்றா மன்னனிற் பற்றவும் பட்டனை
            பொற்றொடிப் பாவையை உற்றது தீரக்
      30    கொற்றம் எய்திக் கொண்டனை போந்த
            மிகுதி வேந்தே புகுகென் போரும்
 
        24 - 31 ;  .......உட்கா தொழுகிற்.,,.,.,,புகுகென் போரும்
 
(பொழிப்புரை) (அஞ்சப்படுவனவற்றை அஞ்சி, அஞ்சப்படாதவற்றை) அஞ்சாது ஒழுகின், அங்ஙனம் ஒழுகும் வேந்தனுடைய பகைவர் எண்ணங்கள் பயன்இலவாய்க் கழியும் என்னும் நீதிப் பெருமையினையுடைய நூலினை ஓதியிருந்தும் தெளியாயாய், தெய்வயானையைப் பெறல்வேண்டும் என்னும் வேட்கை காரணமாகப் பாதுகாவலாகிய படைகளை நீக்கித் தமியையாய்ச் சென்று பகைமன்னனாலே சிறையாகப் பற்றவும்பட்டாய் ! பின்னர் நினது பிழையாலே எய்திய அச் சி.றுமை தீரும்படி, அப் பகைமன்னன் மகளாகிய வாசவதத்தையையும் கவர்ந்துகொண்டு வெற்றியுடனே வந்த மன்னருட் சிறந்த மன்னனே! வருக என்று பாராட்டுவோரும் என்க.
 
(விளக்கம்) 24. இங்குச் சில சொற்கள் அழிந்தன. அவை; அஞ்சுவன அஞ்சி அஞ்சப்படாதவற்றை என்னும் பொருள் தருவன போலும். உட்காது - அஞ்சாமல்.
    25, அஞ்சவேண்டுவற்றை அஞ்சி அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாதொழுகும் வேந்தனுக்கு அவன் பகைவரானே தீமைசெய்ய இயலாது என்று கூறும் நீதிநூலினை ஓதியிருந்தும் நினக்குப் பாதுகாவலாகிய சேனையை நீக்கித் தனியே  சென்று சிறைப்பட்.டனை அங்ஙனமாயினும் இறுதியில் அதுவும் நன்மையேயாயிற்று என்றவாறு.
    27. யானை - தன்னிடத்தினின்றும்  மறைந்த தெய்வயானை, வேட்கை - அதனை மீளவும் பெறல் வேண்டும் என்ற அவா.
    28. பற்றாமன்னன் - பகைமன்னன், பிரச்சோதனன்,
    29, பொற்றொடிப் பாவை; வாசவதத்தை, உற்றது - எய்திய அச்சிறுமை.
    31. மிகுதிவேந்தே-வேந்தருள் மிக்கவேந்தே, இதுநினக்குத் 'தீதாய் வந்த வொருபொருள். ஆசில் பெரும் பொருளாயிற்று நீ வாழ்க' என்று வாழ்த்தியபடியாம்.