உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
           திருமலர்ச் செங்கண் செல்வன் தன்னொடு
     40    பெருமகன் மடமகள் பின்வரக் கண்டனம்
           உம்மைச் செய்த புண்ணியம் உடையம்
           இம்மையின் மற்றினி என்னா கியரென
           அன்புறு கிளவியர் இன்புறு வோரும்
 
        39 - 43 ;  திருமலர்ச் செங்கண்.........இன்புறுவோரும்
 
(பொழிப்புரை)   செந்தாமரைமலர்போன்ற சிவந்த அழகிய கண்களையுடைய நம் வேந்தனாகிய உதயணனோடு பிரச்சோதன மன்னன் இளமகளாகிய வாசவதத்தை வருதலை  முற்பிறப்பிற்செய்த தவம் பெரிதுடையேமாகலிற் கண்டு மகிழ்ந்தேம், இனி இப் பிறப்பிலே இதனினும் சிறந்த பேறு யாது எய்துதல் வேண்டும் ! என்று அன்புடய மொழிகள் பல பேசி இன்பமடைவோரும் என்க.
 
(விளக்கம்) 39, திருமலர் என்றது சிறப்பாலே தாமரை மலரைக்குறித்து நின்றது. என்னை ?  ''பூவிற்குத் தாமரையே'' என்பவாகலின். செங்கண் என்றமையால் செந்தாமரை என்க. செல்வன் - அரசன். 
    40. பெருமகன்-வேந்தன்; பிரச்சோதனன் மடமகள்; வாசவதத்தை.
    41. உம்மை-முற்பிறப்பு. புண்ணியம் - ஈண்டுத் தவம்.
    42. இம்மை - இப் பிறப்பு. என்னாகியர் என்னும் வினா, சிறந்த பேற்றினைப்பெற்றேம் இனி ஒன்றும் வேண்டேம் என்பதுபடநின்றது.
    43, அன்புறு கிளவி-அன்பு கெழுமிய மொழி.