உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
         
     50    கருத்திற் குழ்ச்சியொடு கானத் தகவயிற்
           பெருத்திறல் வேந்தன்எம் பெருமாற் சிறைகொள
           மாயச் சாக்காடு மனங்கொளத் தேற்றி
           ஆய மூதூர் அகம்புக் கவன்மகள்
           நாகுவளை முன்கை நங்கையைத் தழீஇப்
     55    போகெனப் புணர்த்த போகாப் பெருந்திறல்
           யூகிவு மன்னுக உலகினுள் என்மரும்
 
        50 - 56 ;  கருத்திற் சூழ்ச்சியொடு..,. ,உலகினுள் என்மரும்
 
(பொழிப்புரை) காட்டின் அகத்தே எம்பெருமானைத் தமித்த வழிப் பேராற்றலுடைய அரசனாகிய பிரச்சோதனன் தன் மனத்தின்கண் வஞ்சகச் சூழ்ச்சியோடே சிறைசெய்யா நிற்ப, பொய்யேயாகிய தனது சாவுச்செய்தியை உலகத்தார் மெய்யென்று தெளியும்படி செய்து கூட்டமிக்க அப்பிரச்சோதனனுடைய பழைதாகிய உஞ்சை நகரத்துள்ளே புக்கு அப் பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தையைக் கைக்கொண்டு செல்வாயாகவென உதயணனுக்கு அறிவித்து அதற்கேற்றன செய்த அழியாத பேராற்றலையுடைய யூகி என்னும் அமைச்சனும் இவ்வுலகத்தே நீடூழி நிலைபெற்று வாழ்வானாக என அவ் வமைச்சனைப் புகழ்வோரும் என்க.
 
(விளக்கம்) 50, குழ்ச்சி-உதயணனை எஙஙனம் சிறைசெய்வது என்று ஆராய்ந்த வஞ்சகச் குழ்ச்சி யென்க,
    51,  பெருந்திறல்,பெருத்திறல் என எதுகை நோக்கி வலித்தல் விகாரம் பெற்றது. பெருந்திறல்வேந்தன் என்றது இகழ்ச்சிக் குறிப்பு, எதிர்நின்று வெல்லும் திறலிலாத எளிய மன்னன் என்பது கருத்து. எம்பெருமான் என்றது உதயணனை.
    52.  மாயச் சாக்காடு -பொய்யாகிய சாவச் செய்தி.
    53. ஆயம்-குழு. மூதூர்-உஞ்சை நகரம். அவன் - அப்பிரச்சோதனன்.
    54. நாகுவளை-பெண்சங்கு, ஈண்டு நாகு என்பது வாளாஇயல் படையாக நின்றது. நங்கை : வாசவதத்தை. போகா - அழியாத.
    56. யூகி- உதயணனுக்குக் கண்போற் சிறந்த முதலமைச்சன.் யூகியும் என்னும் உம்மை இறந்தது தழீஇ நின்றது. என்மரும் - என்போரும்,
    இனிச் சிலர் உதயணனுக்கு வாசவதத்தையை நல்கிய புண்ணியத்தைப் பாராட்டுகின்றனர்.