உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
           ஓங்கிய பெருங்கலந் தருக்கிய உதயணன்
     75    தேங்கமழ் கோதைஎன் திருநுதன் மாதரை
           வேண்டியுங் கொள்ளான் வேட்டனென் கொடுப்பிற்
           குலத்திற் சிறியவன் பிரச்சோ தனனென
           நிலத்தின் வாழ்நர் இகழ்ச்சி அஞ்சி
           யானை மாயங் காட்டி மற்றுநம்
     80    சேனைக் கிழவனைச் சிறையெனக் கொண்டு
           வீணை வித்தகம் விளங்கிழை கற்கென
           மாணிழை அல்குன் மகள்நலங் காட்டி
           அடற்பேர் அண்ணலைத் தெளிந்துகை விட்டனன்,
           கொடுப்போர் செய்யும் குறிப்பிஃ தென்மரும்
 
        74 - 84 ;  ஓங்கிய பெருங்கலம்........குறிப்பிஃதென்மரும்
 
(பொழிப்புரை) உயர்ந்த கோடவதி என்னும் யாழுடைமை யானே செருக்குற்ற உதயணன் தேன்மணக்கும் மாலையினையும் அழகிய நெற்றியினையும் உடைய என் மகளைத் தானே விரும்பி வந்து மணஞ்செய்துகொள்வா னல்லன். இனி யானே அவனுக்குக் கொடுத்தலை விரும்பி வலிந்து கொடுப்பேன் ஆயின் நிலத்தில் வாழ்வோர் 'பிரச்சோதனன் குலத்தில் தாழ்ந்தவனாகலின் இங்ஙனம் செய்தான் ' என இகழும் இகழ்ச்சியை அஞ்சி அப் பிரச்சோதனன், பொய்யானை ஒன்றனைக் காட்டி அதன்வாயிலாய் நம் உதயணனைச் சிறைப்பிடித்துப் பின்னர் வீணைக்கல்வியை வாசவதத்தை இவன்பாற் பயில்வாளாக என்பது தலைக்கீடாக அவ் வாசவதத்தையின் அழகினை அவனுக்குக் காட்டி, வெற்றியும் புகழுமுடைய நந்தலைவனது பெருந்தகைமையையும் தெளிந்து ஓருபாயத்தாலே தன் மகளோடு செல்லும்படி செய்து சிறைவீடு செய்துவிட்டான்; இங்ஙனம் ஆதல்வேண்டும் என்பது .அப் பிரச்சோதன மன்னன் கருத்தேயாகும் என்று கூறுவோரும் என்க.
 
(விளக்கம்) ஓங்கிய பெருங்கலம் - ஏனை யாழினுள் வைத்து உயர்ந்தயாழாகிய கோடவதி. பெருங்கலம் - பேரியாழ், பெருங்கலம் உடைமையிற் றருக்கிய உதயணன் என்க, தருக்குதல் - யான் யாரினும் சிறந்தேன் எனச் செருக்குறுதல்.
    உயர்குடிப் பிறந்தோர் மகளிரைப் பிறரை இரந்து மணஞ்செய்து கொடார்  ஆகலின் இரந்து கொடுத்தல் இகழ்ச்சியாயிற்று.
    79. யானை மாயம் - மாய யானை.
    80. நம் சேனைக்கிழவன் என்றது உ.தயணனை.   உண்மையில் சிறைபிடித்தல் அவன் கருத்தன்றென்பார் ' சிறையெனக் கொண்டு 'என்றார்.
    81. வீணை வித்தகம் - வீணைவித்தை. விளங்கிழை ; அன்மொழித்தொகை.
    82, மாணிழை-மாட்சிமையுடைய அணிகலன் அணிந்த. நலம் - அழகு.
    83. அடற்பேர் அண்ணல் - போரின்கட் புகழுடைய தலைமையுடையோன்;  உதயணன்.
    84. பிரச்சோதனமன்னன் உதயணன் தன்மகளைக் கவர்ந்து போதலை அறியாதிருந்தானல்லன், அறிந்தே போக்கினன் என்பார் அண்ணலைத் தெளிந்து கைவிட்டனன் என்றார். தெளிதல், தன்மகட்கேற்ற கணவன் இவனிற் சிறந்தாரிலர் என்று தெளிதல்.