உரை
 
2. இலாவாண காண்டம்
 
2, கடிக்கம்பலை
 
         
     10  எண்தரும் பெருங்கலை ஒண்துறை போகிக்
         கண்ணகன் புணர்ப்பிற் கவின்பெற நந்தி
         விண்ணகம் விளங்கு மேதகு நாட்டத்த
         நூற்பொருன் உணர்ந்து பாற்பொருள் பன்னி
         நூற்பொருள் நுனித்துத் தீப்பொருள் ஒரீஇ
     15  அலகை வேந்தற் குலகங் கொண்ட
         ஒழுக்க நுனித்த வழுக்கா மரபின்
         புணர்ப்பியல் காட்சியன் புரையோர் புகழ
 
        10 - 17 ; எண்தரும் பெருங்களை,,,,,புணர்ப்பியல் காட்சியன்.
(10. முதல் 21 வரையில் ஒரு தொடர். இதன்கண், கணிவன் சிறப்புக் கூறப்படுகின்றது.)
 
(பொழிப்புரை)  உறுதிப்பொருள் நான்கனையும் உணர்ந்து கலைத்துறையிற் பயின்று முதிர்ந்து, வானத்தின்கண் அகன்ற இடத்தின்கண் பொருந்துதலையுடையவாய் அழகுபெறமிக்கு விளங்காநின்ற மேம்பாடுடைய நோக்கத்தின்கண்ணவாய்க் கணிதக் கூற்றிற்பட்ட நாளும் கோளுமாகிய பொருள்களை ஆராய்ந்து அவற்றிற்குரிய நூல்களையும் கற்றுத் தெளிந்து அவற்றின் இயக்கத்தாலே நிகழும் நன்மை தீமைகனை உணர்ந்து, தீயவற்றை ஒழித்து வேந்தனுக்குரிய ஒழுக்கத்தோடே கருதிய பொருள்கள் தவிராத முறைமையாலே நன்மைதரும் காலத்தைப் புணர்க்கும் இயல்பினையுடைய மெய்க்காட்சியாளனும் என்க.
 
(விளக்கம்) 10. எண்தரும் பெருங்கலை - சிந்தனை தருகின்றபெரிய கலைகள் என்க. துறைபோகி - அத்துறைகளிற் பயின்று முதிர்ந்து.
    11-14. விண்ணகம் கண்ணகல் புணர்ப்பின் கவின்பெற நந்தி விளங்கும் பாற்பொருள்; மேதகு நாட்டத்தபாற் பொருள் எனத்தனித்தனி கூட்டுக, விண்ணின்கண்ணே அகன்ற இடத்திலே பொருந்துதலையுடையவாய் அழகுற மிக்கு விளங்காநிற்பனவும், மேம்பட்.ட பார்வையின்கண்ணவாய் உள்ளனவும் கணிதத்தின்பாற்பட்டனவும் ஆகிய நாள்கோள் ஆகிய பொருள் என்க.
    13. நாற்பொருள் - அறம்பொருள் இன்பம் வீடென்பன. இனி கணிதநூற்பொருள் நால்வகைப்படுத்தப்பட்டன உளவாயிற்கொள்க. பால்பொருள். ஆறங்கங்களுள் கணிதத்தின்பாற்பட்ட பொருள். அவை நாள் கோள் ஊழி யாண்டு முதவியன. பன்னுதல் -ஆராய்தல்
    14. நூல்-கணித நூல். தீப்பொருள் - தீய பயனைத்தரும் நாள் கோள் முதலியவற்றையுடைய காலம் என்க. முரீஇ - ஒழித்து.
    15.. அலகை வேந்தன் - அரசர்க்கு மேம்பாட்டின் வரம்பாகத் திகழும் அரசன் என்க. அலகை - வரம்பு ; எல்லை, வேந்தன் - ஈண்டு உதயணன்.
    16. நுனித்த-பலவறி சொல், கருதப்பட்டவை, தீப்பொருள் ஒரீஇ என்றதனால் ; நற்பயன்தரும் காலத்தை வேந்தன் ஒழுக்கத்தோடே வழுக்கா மரபிற் புணர்க்கும் இயல்புடைய என்றாம். காட்சி - மெய்க்காட்சி,