உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           அறைந்தறி வுறீஇய பின்றை நிறைந்த
           பெரும்பெயர் மூதூர் விரும்புபு துவன்றிப்
           படையமை நெடுமதிற் கடைமுகந் தோறும்
           பசும்பொன் தோரணம் விசும்புற நாட்டி
           அரும்பொன் தாரோ டணிகதிர் முத்தின்
     60    இரும்பெருந் தாமம் ஒருங்குடன் வளைஇ
 
        55-60; பெரும் பெயர் மூதூர்....ஒருங்குடன் வளைஇ
 
(பொழிப்புரை) நிறைந்த பெரிய புகழினையுடைய அச்சயந்தி மாந்தர் அத்திருமண நிகழ்ச்சியைப் பெரிதும் விரும்பிக் கூடிப்படயையுடைய நெடிய மதிலொடு கூடிய பெருவாயில் தோறும், தோரணக் கம்பங்கள் வானைத் தீண்ட நட்டு, பொன் மாலைகளோடே முத்து மாலைகளையும் ஒருங்கே வளைத்துக் கட்டி என்க.
 
(விளக்கம்) 56. பெரும் பெயர் - பெரும் புகழ். விரும்புபு - விரும்பி; அத்திருமண நிகழ்ச்சியைப் பெரிதும் விரும்பி என்க. துவன்றுதல் - குழு முதல்.
    57, படை- காவற் படை. போர்க்கருவிகளுமாம், மதிலையுடைய கடை என்க. கடை - வாயில்
    59. அழகிய ஒளியையுடைய முத்தாலாய மிகப் பெரிய மாலைகளையும் என்க, வளைஇ - வளைத்துக் கட்டி,