உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           தண்ணிழற் பொதிந்த வெண்மணற் பந்தர்
           கண்ணுறக் கவினிக் கைப்புடை நிறைந்த
           செல்வச் சாலையொடு பல்வழி யெல்லாம்
           அந்த ணாளரொ டல்லோர் பிறர்க்கும்
     80    அமுதின் அன்ன அறுசுவை அடிசில்
           நெய்ச்சூட் டமைந்த சிற்றூண் பந்தரோ
           டெப்பொழு தாயினும் அப்பொழு தீயுந்
           தும நவின்ற நாமக் கைவினை
           மடைத்தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற
     85    அறச்சோற் றட்டில் அகத்தும் புறத்தும்
           முரட்கோல் இளையர் அரண்மாட் டியற்றி
           முட்டாது நடாஅம் அட்டூண் கம்பலும்
 
        76 - 87. தண்ணிழற் பொதிந்த,,,..அட்டூண் கம்பலும்
 
(பொழிப்புரை) தண்ணிய நிழலாலே பொதியப்பட்ட வெள்ளிய புதுமணல் பரப்பிய பந்தரோடே கண்ணுக்குப் பொருந்த அணி செய்யப்பட்டுப் பக்கத்தே நிறைந்த பண்டகசாலைகளிடத்தும் இன்னோரன்ன பிறவிடத்து மெல்லாம், அந்தணர்க்கும் பிறர்க்கும் அமிழ்தம் போன்ற ஆறுசுவையுடைய அடிசிலும் நெய்யில் அடப்பட்ட சிற்றுண்டியும் வழங்குதற்கு வைக்கப்பட்ட பந்தரிடத்தும், எப்பொழுது விரும்பினும் அப்பொழுதே வழங்கும் மடைத்தொழிலில் தப்பாத தொழிலையுடையோர் உறையாநின்ற அறச் சோற்றட்டிலின் உள்ளும் புறத்தும், வலிய கோலையுடைய காவலிளையருடைய பாதுகாவலகத்தே சமைத்து முட்டுப்பாடின்றி நிகழ்த்தாநின்ற அட்டூணால் எழா நின்ற ஆரவாரமும் என்க,
வெண் மணற் பந்தபிற் கவினி பக்கங்களிலே நிறைந்த செல்வச் சாலையிடத்தும், சிற்றூண்பந்தரிலும், வாழ்க்கையர் பயின்ற அறக்கோட்டத்தின் அகத்தும் புறத்தும், இளையர் அரணின்கண் சமைத்து முட்டாது நடத்தும் அட்டூண் கம்பலையும் என்க.
 
(விளக்கம்) 77. கண்ணுற-கண்ணுக்குப் பொருந்திய. கவினி - அழகுற்று. செல்வச்சாலை - உணவுப்பொருள் தொகுத்து வைத்த இடம்; உட்கிரகம் - இக்காலத்தார் இதனை உக்கிராணம் என்பர்.
    79, அல்லோர் - அந்தணர் அல்லாதார்.
    81. நெய்ச்சூடு - நெய்யில் சமைக்கப்பட்ட பண்டம்,
    83. தூமம் - புகை, பிறர் அஞ்சுதற்குக் காரணமான கைத்தொழிலாகிய மடைத்தொழில் என்க. புகையினூடு தீயிடைச்செய்யும் தொழிலாதலால் நாமக்கைவினை என்றார். நாமம் - அச்சம்.
    84. வழாஅ-வழுவாத.
    85. அறச்சோறு அடும் இல் .அறக்கோட்டம்,
    86, முரண்-வலி. அரண்மாட்டு - பாதுகாவலின் அகத்தே.
    87 முட்டாது-முட்டுப்பாடின்றி. நடா அம்-நடத்துகின்ற.அட்டூண் கம்பல்- அட்டுண்டலாலே உண்டாகும் ஆரவாரம்