உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           மங்கலப் பெருங்கொடி மங்குல்வா னத்துள்
           உரற்றுமழை கிழிக்கும் ஒண்மணி உச்சிப்
           பல்லோர் காணும் பரூஉத்திரள் அடியிற்
     120    பன்மணிக் கண்டத்துக் கண்ணிழற் கலங்கி
           ஓங்குபு நிமிர்ந்த காம்பொடு கவ்விப்
           பயில்பூம் பத்திக் குயில்புரை கொளுவின.
           வட்டமைத் தியற்றிய வலம்புரி சாற்றி
           ஆடகப் பொற்கயிற் றரும்பொறி யாப்பின
     125    வயிரப் பல்லரிப் பயில்பூம் பத்திக் 
           கிண்கிணித் தாரொடு கலவிய கதிரணி
           கொளுவொடு படாஅக் கொடுப்பவ ழத்துத்
           தாமந் தாழ்ந்து தலைமுதற் கோத்த
           நீலக் காழ்மிசை கெற்றி மூழ்கி
 
        117 - 129; மங்குல்,.,,,,,,நெற்றி மூழ்கி
 
(பொழிப்புரை) முகிலைக் கிழிக்கும் உச்சியினையும் பருத்துத் திரண்ட அடியினையும் அவ்வடியினிடத்தே பல்வேறு மணிகன் வைத்து இழைக்கப்பட்ட கண்டங்களையும் உடையவாய்க் காண்போர் கண்ணொளியைக் கலக்கும் தன்மையுடையவாய் மிக உயர்ந்த காம்புகளைக் கவ்வியிருப்பனவாய், வட்டிலே வைத்து வலப்புறமாக முறுக்கப்பட்ட பொன்கயிற்றோடு கொடிகள் ஏறவும் இறங்கவும் செய்யும் பொறிகள் கட்டப்பட்டனவாய் வயிரமணி முதலிய மணிகளை நிரல்பட வைத்தி்ழைத்த பலவாகிய பூத்தொழிலையும் பத்திகளையும் உடைய சதங்கை மாலையோடே கொளுக்களோடே அமைந்த பவழமாலைகளை உச்சியினின்றும் அடிகாறும் தூக்கப்பட்டனவாய் திகழும் நீலநிறக் கழிகளிடத்தே கொளுவி அணி செய்யப்பெற்ற (138) அராஅந் தாணத்து என முடியும்,
 
(விளக்கம்) 117. மங்குல் - முகில்.
    118. உரற்றுமழை - முழங்கும் முகிழ். ஒண்மணிவைத்திழைத்த உச்சி என்க.
    119. பலரும் வியந்துபார்க்கின்ற அடி என்க,
    120. மணிக்கண்டம் - மணிகள் வைத்து இழைத்த வகுப்பறைகள், கண்ணிழல் - கண்ணொளி, கலங்கி - கலக்கி. காம்பு - பெருங் கொடி மரத்தின்கண் பல்வேறு கொடிகளைக் கொளுவுதற்கெனச் செருகப்பட்ட காம்புகள் என்க.
    122. பூம்பத்திபொலிவுடைய நிரல். குயில்புரை - தொழில் மேம்பாடுற்ற என்க. கொளு - பொருத்துவாய்.
    123. வட்டு - கயிறு முறுக்குமொரு கருவி. வலம்புரி-வலப்பக்கமாக முறுக்கிய புரி.
    124 ஆடகப்பொன் - நால்வகைப் பொன்னில் வைத்து ஆடகமென்னும் பொன் என்க. பெரிய மரத்தின் தளையிடத்தே கோக்கப்பட்ட நீனிறக் காம்பின்மேல் கொளுவி என்க. பெரிய கொடிமரத்தில் கலப் பெருங்கொடிமாட்டி அணிசெய்யப்பட்ட அராஅந்தாணத்து என்க.