உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           அறிவர் சரித முறையிற் சுட்டி
     135    உரையும் ஓத்தும் புரையாப் புலமைப்
           பெரியோர் நடாவுந் திரியாத் திண்ணெறி
           ஒராஅ உலகிற் கோங்குபு வந்த
           அராஅந் தாணத் தருச்சனைக் கம்பலும்
 
        134 - 138. அறிவர் சரிதம்...........அருச்சனைக் கம்பலும்
 
(பொழிப்புரை) உரையானும் ஓதற்றொழிலானும் ஒப்பற்ற புலமையையுடைய சான்றோர்கள் மாறுபடாத திண்ணிய மெய்ந் நெறிச் செலவினையுடையராய் இவ்வுலகம் உயரும் பொருட்டு வந்து அவதாரஞ் செய்த தீர்த்தங்கரர் முதலிய அறிவருடைய வரலாற்றினைக் கூறாநிற்பவும் மாந்தர் அருக்கடவுளை அருச்சிக்கவும் இவ்வாற்றான் எழுந்த ஆரவாரமும் என்க,
 
(விளக்கம்) 134, அறிவர் - தீர்த்தங்கரர், முதலிய சான்றோர். உரை - சொல்வன்மை. ஓத்து - கல்வி. புரையாப் புலமை - ஒப்பில்லாத புலமை. அரா அந்தாணம் - அருகன் கோயில், (117) மங்கலப் பெருங் கொடியை (129) நீலக்காழ்மிசை மாட்டி ஒப்பனை செய்யப்பட்ட (138) அரா அந்தாணத்தின்கண் பெரியோர் அறிவர் சரிதம் சுட்டி நடாவுதலானும், மக்கள் அருகக்கடவுளை அருச்சித்தலானும் எழுந்த ஆரவாரமும் என இயைபு காண்க,
    139 முதல் 157 - வரை ஒரு தொடர், இதன்கண் சேரிகளை அணிசெய்தல் கூறப்படும்.